Published : 12 Aug 2023 05:08 AM
Last Updated : 12 Aug 2023 05:08 AM
புதுடெல்லி: வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹரியாணா உட்பட சில மாநிலங்களில் சமீபத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் என்றும் அவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் பொதுக் கூட்டங்களில் பேசப்பட்டன. இச்சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் நட்ராஜிடம், வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆராய ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘அனைத்து சமுதாயத்தினர் இடையே மதநல்லிணக்கம் இருக்கவேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். வெறுப்பு பேச்சு நல்லதல்ல. இதை யாரும் ஏற்க முடியாது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT