Published : 28 Nov 2017 11:05 AM
Last Updated : 28 Nov 2017 11:05 AM
ஆதார் எண் கட்டாய இணைப்புக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம்
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘ஆதார் கட்டாய இணைப்புக்கு தடை கோரிய மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘தகவல்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் தனது வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக சில பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு அளிக்க வாய்ப்புகள் உள்ளன. அதற்கு சில காலம் ஆகும். எனவே, ஆதார் தொடர்பான வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஷியாம் திவான், ‘ஆதார் தொடர்பான இறுதி விசாரணையை பிப்ரவரி மாதத்தில் நடத்த எந்த ஆட்சேபணையும் இல்லை. அதற்கு முன்பாக இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நிவாரணம் பெற ஏற்கனவே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘முதலில் இடைக்கால நிவாரணம் கோரிய மனு தாக்கலாகட்டும். அடுத்த வாரம் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டவுடன், ஆதார் கட்டாய இணைப்பு தொடர்பான மனுக்கள் அனைத்தையும் அந்த அமர்வு விசாரிக்கும்’ என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment