Published : 18 Nov 2017 09:23 AM
Last Updated : 18 Nov 2017 09:23 AM
சாதி, மத பேதம் பாராமல் ஏழை மக்களுக்கு தொண்டு செய்து வந்த ஜங்கிலி ஜட் பட் மஸ்தானி மாஜி என்கிற அம்மாஜி நேற்று காலமானார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இராக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அம்மாஜி என்று கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, தியானப் பயிற்சி மற்றும் ஞானம் பெற்ற இவர், ஆந்திர மாநிலம் சித்தூரில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.
சித்தூர், பலமநேர் சாலையில் உள்ள தனது தர்காவுக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு சாதி, மத வித்தியாசம் பாராமல் உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அம்மாஜி. இயற்கை வைத்திய முறைகளை அறிந்து வைத்திருந்தார்.
அம்மாஜியிடம் ஆசி பெறுவதன் மூலம் தங்களுடைய நோய், கஷ்டங்கள் தீருவதாக அவரை நாடி வந்தவர்கள் நம்பினர். குறிப்பாக, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
சித்தூரில் உள்ள காஜூர் எனும் பகுதியில் இவர் விநாயகர், முருகன், அம்மன், ஆஞ்சநேயர் சிலைகளுடன் கோயில் கட்டியிருக்கிறார். தர்காவிலேயே தனக்கென சமாதி அமைத்து கொண்டு . தனது இறுதி நாள் வரையில் உணவு உண்ணாமல், வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு வாழ்ந்து வந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி
100 வயதை கடந்த நிலையில், பள்ளிப்பட்டில் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக அம்மாஜியின் உயிர் பிரிந்தது. பின்னர் இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சித்தூரில் உள்ள தர்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அம்மாஜியின் இறுதிச் சடங்கில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT