Published : 11 Aug 2023 03:56 PM
Last Updated : 11 Aug 2023 03:56 PM

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் எதிரொலி - மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பி.,க்கள் மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பேசும்போது, "மன்னன் திருதிராஷ்டிரன் பார்வையற்று அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசரும் பார்வையற்று அமர்ந்திருக்கிறார்" என்று விமர்சித்தார். இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி அவரை இடைநீக்கம் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானம் நிறைவேறியது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'இண்டியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மக்களவை நடவடிக்கைகளை இன்று புறக்கணித்தன.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூர், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'இண்டியா' கூட்டணி கட்சிகள் மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளன. மேலும், மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவை ஒட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளிக்கும் தேநீர் விருந்தையும் புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளாம். 23 கட்சிகளைச் சேர்ந்த 142 எம்பிக்கள் இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் சிலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "எம்பி.,க்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து இடைநீக்கம் செய்கின்றனர். இதற்கு முன் இதுபோல் நடந்தது கிடையாது. இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற ஆலோசனைக் குழு மற்றும் பிற நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது எனும் நோக்கில் இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளனர். மோடி அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதேபோல், தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தான் பிரதமரை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x