Published : 11 Aug 2023 09:10 AM
Last Updated : 11 Aug 2023 09:10 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்க மக்களாவை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதானவிவாதம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. நேற்று பிரதமர் பதிலுரையின்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிற்பகல் 2.48 மணிக்கு பேசத் தொடங்கினார். தொடர்ந்து விவாதங்கள், பிரதமரின் பதிலுரை, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஆகியன நடைபெற்றன.
இறுதியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதன்பிறகு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் தொடர்பாக சோனியா காந்தி இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது என்ன? முன்னதாக நேற்று அவையில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடியை திருதராஷ்டிராருடன் ஒப்பிட்டுப் பேசினார். "நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்று மட்டுமே கூறினோம்.
மன்னன் திருதராஷ்டிரன் பார்வையற்று அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் பார்வையற்று அமர்ந்திருக்கிறார்" என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT