Published : 11 Aug 2023 04:06 AM
Last Updated : 11 Aug 2023 04:06 AM
புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘மணிப்பூரில் அமைதி திரும்பும். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதானவிவாதம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
3-வது நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்தது. அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை கண்டித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்து, பின்னர் அவைக்கு திரும்பினர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிற்பகல் 2.48 மணிக்கு பேசத் தொடங்கினார். மக்களவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பிரதமர் அவையில் இருப்பது மரபு. இதன்படி பிரதமர் மோடி அவைக்கு வந்தார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் அவைக்கு திரும்பினர். அப்போது மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் நம்பிக்கையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காக மக்களுக்கு நன்றி. மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது எங்களுக்கான சோதனை அல்ல. இது எதிர்க்கட்சிகளுக்கான சோதனை.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். அந்த கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். இதற்கு முந்தைய அனைத்து தேர்தல் வெற்றி சாதனைகளையும் நாங்கள் முறியடிப்போம்.
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில் ஜன் விஸ்வாஸ் மசோதா, மருத்துவ மசோதா, பல் மருத்துவ ஆணைய மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆனால் அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. அனைத்தையும் அரசியலாக்குவதை மட்டுமே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. நாட்டு மக்கள் நலன் மீது எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. சொந்த கட்சிகள் மீது மட்டுமே அக்கறை செலுத்துகின்றன. மக்களவை தேர்தலுக்காக பல்வேறு ஊழல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்துள்ளன.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை நல்ல சகுனமாக கருதுகிறோம். எங்களுக்கான போட்டி மைதானத்தை எதிர்க்கட்சிகளே தயார் செய்து கொடுத்துள்ளன. இந்த ஆட்டத்தில் ஆளும் கட்சி வரிசையில் இருந்து சதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. சிக்சர்கள் பறக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் ஒரு பந்தைக்கூட வீச முடியவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதேபோல, 2028-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும். அப்போது உலகின் 3-வதுபெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்து நிற்கும்.
தீவிரவாதிகளை நம்பும் காங்கிரஸ்: தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ தரப்பில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதை நம்பவில்லை. அந்த கட்சி தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. கரோனா பெருந்தொற்றின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தினோம். அப்போதும் கரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியது.
மணிப்பூர் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படும். அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும்.
வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியே மூலகாரணம். அந்த கட்சியின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கில் பல்வேறு தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திரா காந்தி ஆட்சியில் மிசோரம் மக்கள் மீது விமானப் படை மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதன் காரணமாக, இன்றுவரை மார்ச் 5-ம் தேதியை கறுப்பு தினமாக மிசோரம் மக்கள் அனுசரித்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசவில்லை என்று குற்றம்சாட்டி இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகு, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசினார்.
இறுதியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதன்பிறகு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT