Published : 05 Nov 2017 09:31 AM
Last Updated : 05 Nov 2017 09:31 AM
திருப்பதி கோயிலில் வரும் 14, 21-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 95.46 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று ‘டயல் யுவர் இஓ’ எனும் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் பங்கேற்று பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:
பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருமலையில் கோயிலுக்குள் உள்ள வெள்ளி வாசலில் இருந்து கோயிலுக்கு வெளியே வாகன மண்டபம் வரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் தற்காலிக கூரை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் அமைக்கப்படும். மழை, வெயில் ஆகியவற்றால் பக்தர்கள் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் உண்டியலில் பக்தர்கள் பணத்தை மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும். மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை போடக்கூடாது.
தெலுங்கு, கன்னட மொழிகளைத் தொடர்ந்து, விரைவில் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இணையதள சேவை தொடங்கப்படும். மேலும் வரும் 14, 21-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் 4,000 பேருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வரும் 15, 22-ம் தேதிகளில் 5 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஏழுமலையானை காலை 9 முதல் 1.30 வரை தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23.77 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 95.46 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 55.19 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உண்டியலில் ரூ.83.76 கோடி காணிக்கை செலுத்தப்பட்டது. இவ்வாறு அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
மேலும் ஆன்லைனில் 52,190 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதைப் பெறும் பக்தர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT