Published : 28 Nov 2017 11:06 AM
Last Updated : 28 Nov 2017 11:06 AM
சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார். இதனையொட்டி, வரலாறு காணாத வகையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாடு இன்று 28ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள 1,600 தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கு மற்றொரு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளதால், ஹைதராபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 நாட்கள் ஹைதராபாத்தில் தங்க உள்ள இவாங்காவை இன்று காலை விமான நிலையத்தில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மிகுந்த பாதுகாப்புடன் டிரைடண்ட் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இரவு ஃபலக் நமா பேலஸில் அவருக்கு மத்திய அரசு சார்பில் தடபுடலான விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது. இதில் வட, தென்னிந்திய உணவு வகைகள், மற்றும் நிஜாம் காலத்து உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
இதில் பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளையும் உச்சி மாநாடு தொடர்கிறது. நாளை இரவு கோல்கொண்டா கோட்டை வளாகத்தில் தெலங்கானா அரசு சார்பில் இவாங்காவிற்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவாங்கா நாளை இரவு 9.20 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைக்கிறார். 30 கி.மீ தூரம் வரை இதில் பயணம் செய்யலாம். நாட்டின் 10வது மெட்ரோ ரயில் திட்டம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT