Last Updated : 10 Aug, 2023 11:49 PM

1  

Published : 10 Aug 2023 11:49 PM
Last Updated : 10 Aug 2023 11:49 PM

மவுலானா ஆசாத் ஃபெலோஷிப் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மவுலானா ஆசாத் நேஷனல் ஃபெலோஷிப் (எம்ஏஎன்எப்) திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று திமுக எம்பி டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியின்போது, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துபூர்வ பதிலில், "மத்திய பல்கலை மானியக்குழு(யூஜிசி) மற்றும் சிஎஸ்ஐஆர் ஆகியவற்றின் ஜேஆர்எஃப் திட்டத்தின் படி, இந்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் மவுலானா ஆசாத் தேசிய ஃபெலோஷிப் திட்டத்தை செயல்படுத்தி வந்தது.

யூஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் ஃபெலோஷிப்கள் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூக பிரிவுகள் மற்றும் சமூகங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறலாம்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் முறையே தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகவும் பழங்குடி மாணவர்களுக்காகவும் பெல்லோஷிப் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன .

மேற்கூறிய திட்டங்களால் பயன்பெறும் மாணவர்கள் ஒரே வகையினர்தான் என்பதைக் கருத்தில் கொண்டு, 2022-23 முதல் எம்ஏஎன்எப் திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது எம்ஏஎன்எப் ஃபெலோஷிப் பெறுபவர்கள் உள்ளனர்.

இவர்கள், தற்போதுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அந்தந்த கால வரம்பு முடியும் வரை தொடர்ந்து அந்த ஃபெலோஷிப்களைப் பெறுவார்கள். இப்போதைக்கு, எம்ஏஎன்எப் திட்டத்தைப் புதுப்பிக்க எந்த யோசனையும் இல்லை" இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் மக்களவையில் அளித்த பதில் குறித்து விழுப்புரம் எம்பியான டி.ரவிகுமார் கருத்து கூறும்போது, ‘‘உயர்கல்வி பயிலும் சிறுபான்மை சமூக மாணவர்களின் எண்ணிக்கையை சமூக வாரியாக வழங்குமாறு கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் தராமல் ஒட்டுமொத்தமாக தந்துள்ளனர். உயர்கல்வி பயிலும் சிறுபான்மை சமூக மாணவர்கள் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 லட்சம் பேர் அதிகரித்து வந்துள்ளனர். ஆனால் 2019 -20ல் 29.88 லட்சமாக இருந்த சிறுபான்மை சமூக மாணவர் எண்ணிக்கை 2020-21ல் 27.51 லட்சமாகக் குறைந்துள்ளது.

அதாவது ஒட்டுமொத்தத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர். கோவிட் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த சரிவு சீர்செய்யப்பட்டதா என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களிலிருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு வழியின்றி, 2021-22 ஆண்டுக்கான புள்ளி விவரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x