Published : 10 Aug 2023 01:26 PM
Last Updated : 10 Aug 2023 01:26 PM

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு: எஃப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்

இம்பால்: மணிப்பூரில் மேலும் ஒரு பெண் தான் கடந்த மே 3-ஆம் தேதி வன்முறை கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி நடந்த பேரணியில் மோதல் ஏற்பட்டது. மைத்தேயி இனத்தவரை பட்டியலினத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் கலவரம் மூண்ட சூழலில் இதுவரை அங்கு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள், பொருட்சேதங்களைத் தாண்டி கடந்த ஜூலை 19-ஆம் தேதி மணிப்பூர் வன்முறை தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குகி ஸோ சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை தாக்கலாவது வரை கொண்டுவந்தது.

இந்தச் சூழலில் மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி கலவரத்தின்போது, தான் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக 37 வயது பெண் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார். நேற்று (புதன்கிழமை) மாலை பிஷ்ணுபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஜீரோ எஃப்ஐஆர் ஆக அது பதிவு செய்யப்பட்டது. மிகப் பெரிய கலவரங்கள் நடக்கும்போது மக்கள் முகாம்களுக்கு மாற்றப்படும் பட்சத்தில் அவர்களின் புகார்கள் முகாம் பகுதி காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் ஆக பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும். அந்த வகையில் பிஷ்ணுபூரில் பதிவான இந்த எஃப்ஐஆர் தொடர்பாக தற்போது சூரச்சந்த்பூர் காவல் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வேதனை சாட்சி சொல்லும் எஃப்ஐஆர்: பாதிக்கப்பட்ட 37 வயது பெண் கொடுத்த புகாரில் பல வேதனைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ‘என் வீடு சூரச்சந்த்பூரில் உள்ளது. கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் வெடித்த நாளில் எங்கள் வீடு அமைந்த பகுதியில் இருந்த பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்த நாங்கள் அச்சத்தில் அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினோம். நான் என் இரு மகன்கள், எனது சகோதரரின் மகள், எனது மைத்துனி ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

நாங்கள் வேகமாக ஓட்டமெடுத்தோம். எனக்கு முன்னால் என் மைத்துனி ஓடிக் கொண்டிருந்தார். நான் வேகமாக ஓடும்போது திடீரென கால் இடரி கீழே விழுந்துவிட்டேன். உடனே என் மைத்துனி எனை நோக்கி வந்தார். நான் அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடும்படி அறிவுறுத்தினேன். அவரும் ஓடிவிட்டார். நான் மேலே எழுந்தபோது என்னை 6 பேர் சுற்றி வளைத்தனர். என்னை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். பின்னர் அந்த ஆறு ஆண்களும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். நான் எனது குடும்பத்தின் நலன் கருதி இதனை வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் சூழலில் நான் துணிந்து புகார் கொடுத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x