Published : 10 Aug 2023 07:11 AM
Last Updated : 10 Aug 2023 07:11 AM

கறுப்பாக இருப்பதால் கணவர் மீது பொய் புகார் கூறி அவமதித்த ம‌னைவி: விவாகரத்து வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

பெங்களூரு: கணவர் கறுப்பாக இருந்ததால் பொய் புகார் கூறி அவமதித்த மனைவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் குமார். கடந்த 2007ம் ஆண்டு ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒருபெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், ராதா தன் கணவர் மீது போலீஸில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இதனால் ரமேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ராதா தன் கணவரை பிரிந்து தனியாக வசித்தார். எனவே ரமேஷ் குமார் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ஆனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதையடுத்து ரமேஷ் குமார் கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘நான் கறுப்பாக இருப்பதால் என் மனைவி என்னை வெறுக்கிறார். என் நிறத்தை குறிப்பிட்டு பலமுறை திட்டியுள்ளார். நான் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதாகவும் பொய் புகார் கூறினார்'' என குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அலோக் ஆரதே, அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்தனர். நேற்று இருவரும் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.

கடும் குற்றம்: அப்போது நீதிபதிகள், ‘‘விசாரணையில் கணவர் கறுப்பாக இருந்ததால் மனைவி அவரை அவமானப்படுத்தியது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரை நிற வெறியோடு ஒடுக்குவது கடுமையான குற்றமாகும். இந்த கொடுமையை ஏற்க முடியாது. கணவரை பிரிந்து செல்வதற்கு தெரிவித்த காரணங்கள் நம்பும்படியாக இல்லை. எனவே கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதுடன், கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x