Published : 10 Aug 2023 04:50 AM
Last Updated : 10 Aug 2023 04:50 AM

மணிப்பூரை இந்தியாவின் அங்கமாக பிரதமர் கருதவில்லை - ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

மக்களவையில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி.படம்: பிடிஐ

புதுடெல்லி: மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அவர் கருதவில்லை என்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளாக நேற்றும்விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பாஜகஎம்.பி.க்கள் பேசினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: எனக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்கிய மக்களவை தலைவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். நிவாரண முகாம்களை பார்வையிட்டு, அங்குள்ள பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடினேன். நமது பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவின் ஓர் அங்கம் என அவர் கருதவில்லை. மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது.

மணிப்பூரில் பாரத மாதாவை நீங்கள் கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல. நீங்கள் தேசதுரோகி. ராணுவத்தை பயன்படுத்தி மணிப்பூரில் ஒரே நாளில் அமைதியை நிலைநாட்ட முடியும். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. அங்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். அதையே இப்போது ஹரியாணாவிலும் செய்ய முயற்சிக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்மிருதி இரானி பதில்: இதையடுத்து, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: எனக்கு முன்பு பேசியவரின் ஆக்ரோஷமான நடத்தையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக ஒருவர் பேசுகிறார். அதை காங்கிரஸார் கைதட்டி வரவேற்கின்றனர். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. அது பிரிக்கப்படவில்லை. அதை பிரிக்கவும் முடியாது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறினர். எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர்.

விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது அவையில் உள்ளவர்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். பெண்கள் நிறைந்த ஒரு அவையில், பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஒருவர்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார். இதுதான் அவரது குடும்ப கலாச்சாரமா. இவ்வாறு ஸ்மிருதி பேசினார்.

அமித் ஷா குற்றச்சாட்டு: மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியபோது, ‘‘மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் முழு நம்பிக்கை உள்ளது. ஊழல், வாரிசு அரசியலுக்கு பிரதமர் மோடி முடிவுகட்டி உள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களை தவறாகவழி நடத்தவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன’’ என்றார்.

நேற்று மாலை வரை நீடித்த விவாதம் இன்றும் தொடர்கிறது. விவாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். அதன் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x