Published : 10 Aug 2023 04:41 AM
Last Updated : 10 Aug 2023 04:41 AM
புதுடெல்லி: நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று வெளியேறும்போது, ராகுல் காந்தி பறக்கும் முத்தம் (ஃபிளையிங் கிஸ்) கொடுப்பது போன்று சைகை காட்டியதாகவும், இது கண்ணியமற்ற நடத்தை என்றும் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் முறைப்படி புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மற்றும் இதர பெண் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட அந்த புகார் கடிதத்தில், ‘பெண் எம்.பி. பேசிக்கொண்டு இருந்தபோது, ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவர் ஸ்மிருதி இரானி உரையாற்றும்போது தகாத சைகை செய்துள்ளார். இது, அவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளதோடு, அவையின் மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் செயல். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறும்போது, ‘‘அவையில் எம்.பி. ஒருவர் இதுபோல நடந்து கொள்வது இதுவே முதல்முறை. ராகுல் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT