Published : 29 Nov 2017 09:59 AM
Last Updated : 29 Nov 2017 09:59 AM

ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை: 16,375 கோடியில் பிரதமர் தொடங்கினார் - 30 கி.மீ. தூரத்துக்கு சேவை ஆரம்பம்

ஹைதராபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் நகர மக்களின் நீண்ட நாள் கனவு மெட்ரோ ரயில். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவான பின்னர், திட்டப் பணிகள் சுறுசுறுப்படைந்தன. இதில், மியாப்பூரிலிருந்து நகோல் வரை முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மெட்ரோ ரயில் முதல்கட்ட சேவையை பிரதமர் மோடி நேற்று மதியம் 2.15 மணிக்கு மியாப்பூரில் தொடங்கி வைத்தார். மியாப்பூரில் இருந்து கூகட்பள்ளி வரை சுமார் 5 கி.மீ.தூரம் ரயிலில் அவர் பயணம் செய்தார். இந்த ரயிலை பெண்கள் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் 3 ஏசி பெட்டிகள் உள்ளன. ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே சயமத்தில் சுமார் 1,000 பயணிகள் பயணம் செய்யலாம்.

கட்டுமானப் பணிகளை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் முதன்மை நிதி அதிகாரி ஜெ.ரவிகுமார் கூறுகையில், ‘‘அரசு மற்றும் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களில் உலகின் மிகப் பெரிய திட்டம் இது. மொத்தம் 71 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவு ரூ.16,375 கோடி. முதல்கட்டமாக 30 கி.மீ. தொலைவுக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதிக தொலைவுக்கு ஒரே நாளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதும் இதுவே முதல் முறை. 2018 டிசம்பருக்குள் பணிகள் முழுமையடையும்’’ என்றார்.

தெலுங்கில் பேசிய மோடி

ஹைதராபாத் வந்த மோடியை விமான நிலையத்தில், ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி முதலில் தெலுங்கில் பேசி அசத்தினார். தெலுங்கில் அவர் பேசுகையில், ‘‘சகோதர, சகோதரிகளே, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சுதந்திரத்துக்குப் பின் ஹைதராபாத் சமஸ்தானத்தை வல்லபாய் படேல்தான் இந்தியாவுடன் இணைத்தார். 4 கோடி தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x