Published : 10 Nov 2017 08:58 AM
Last Updated : 10 Nov 2017 08:58 AM
உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓட்டல்களின் கட்டணத்தை குறைக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள ஓட்டல்களில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சித்தூரில் உள்ள பரிகார சேவா சமிதி எனும் தொண்டு நிறுவனம் ஹைதராபாத் உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிற்கு ஓராண்டாக தேவஸ்தானம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தேவஸ்தான அதிகாரிகள் யாரும் இவ்வழக்கில் ஆஜர் ஆகவில்லை. இதனால் நீதிபதிகள், பக்தர்களிடம் கொள்ளை அடிக்கும் ஓட்டல் விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா? என கேள்வி கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 31-ம் தேதி தேவஸ்தான அதிகாரிகள் உயர்நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகினர். உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து, திருமலையில் உள்ள 17 பெரிய ஓட்டல்கள், 8 சிறிய ரக ஓட்டல்கள் மற்றும் 150-க்கும் அதிகமான பாஸ்ட் புட் மைய உரிமையாளர்களை அழைத்து, உடனடியாக ஓட்டல்களில் விற்கப்படும் திண்பண்டங்களின் விலையை குறைக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், ஓட்டல்களின் மாத வாடகையை குறைக்க மாட்டோமெனவும் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் சில ஓட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதன் விவரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்): 2 இட்லி ரூ.7.50 (பழைய விலை 25) 2 சப்பாத்தி ரூ.20 (ரூ. 60) வெஜிடபிள் பிரியாணி ரூ.19 (ரூ. 50) உப்புமா ரூ.9 (ரூ. 20) பிளேட் அளவு சாப்பாடு ரூ.22.50 (ரூ.60) முழு சாப்பாடு ரூ.31 (ரூ.100), டீ ரூ.5 (ரூ.15) காபி ரூ.10 (ரூ. 20) என குறைக்கப்பட்டுள்ளது.
இவை திருமலையில் உள்ள சிற்றுண்டி சாலைகள், மற்றும் ஜனதா ஓட்டல்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கான விலைப் பட்டியலும் கண்டிப்பாக ஓட்டல் முன் வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரிய ஓட்டல்களில் இது அமலுக்கு வரவில்லை. வாடகையை குறைக்க வேண்டுமென இவர்கள் தேவஸ்தான நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெரிய ஓட்டல்களிடம் மாத வாடகையாக ரூ.36 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரை தேவஸ்தானம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஓட்டல்களில் உணவுப் பொருட்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கையையும் பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT