Published : 09 Aug 2023 08:34 PM
Last Updated : 09 Aug 2023 08:34 PM
புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை வழங்குவார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனை அவர் மக்களவையில் அறிவித்தார்.
மணிப்பூரில் மைத்தேயி இனத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ஆம் தேதி நடந்த பேரணி கலவரத்தில் முடிய அன்று தொடங்கிய வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக (ஜூலை 19) மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதிலளிக்கக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.
அன்றாடம் அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின. இந்தச் சூழலில் மத்திய அரசின் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த ஆகஸ்ட் 8 தொடங்கி இன்று இரண்டாவது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்றுள்ளது. இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் அவர் காட்டமாகப் பேசினார். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித் ஷா ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று பதிலுக்கு காரசாரமான வாதத்தை முன்வைத்தனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை (ஆகஸ்ட் 10) பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளிக்கவிருக்கிறார். | வாசிக்க >
“மணிப்பூர் வன்முறை மீதான ‘அரசியல்’ வெட்கக் கேடானது” - மக்களவையில் அமித் ஷா கொந்தளிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT