Published : 09 Aug 2023 06:27 PM
Last Updated : 09 Aug 2023 06:27 PM
புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அத்துடன், மணிப்பூர் வன்முறை மீது நடைபெறும் அரசியல் வெட்கக் கேடானது என்றும் எதிர்க்கட்சிகளை அவர் காட்டமாக விமர்சித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: "பிரதமர் மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.
அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது" என்றார் அமித் ஷா.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட முறைகள் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். இதுவே வடகிழக்கு மாநிலம் நம் நாட்டின் அங்கம் என்பதை நிரூபித்துவிடவில்லையா? எதிர்க்கட்சிகள் வடகிழக்கு மாநிலங்கள் விஷயத்தில் எங்களைக் கேள்விக் கேட்கின்றன. ஆனால் அவர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்காக இதுவரை என்ன செய்தார்கள்?” என்று வினவினார்.
மணிப்பூர் வன்முறை கவலையளிக்கிறது. ஆனால்... - தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித் ஷா, “மணிப்பூர் வன்முறை கவலையளிக்கிறது. ஆனால், அதன் மீது நடைபெறும் அரசியல் வெட்கக் கேடானது. மணிப்பூரில் அதீத வன்முறை நடந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட எதிர்க்கட்சிகளின் எதிர்வினை அதிக வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தமைக்கு நாம் ஓர் ஒட்டுமொத்த சமூகமாகத்தான் வெட்கப்பட வேண்டும். அதில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது” என்றார்.
“ராகுல் அரசியல் செய்கிறார்...” - மேலும் அவர், “மணிப்பூர் விவகாரத்தைத் தொடர்ந்து ராகுல் அங்கு சென்றதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவருடைய பாதுகாப்புக்காக நாங்கள் அவரை ஹெலிகாப்டரில் செல்லச் சொன்னோம். அவரோ சாலை மார்க்கமாகச் செல்வதாகச் சொல்லி அங்கே நாடகங்களை அரங்கேற்றினார். அடுத்த நாள் ஹெலிகாப்டரில் சென்றார். ராகுல் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு அதை மக்கள் அறிய மாட்டார்கள் என்று நினைத்தால் அது தவறான பார்வை. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம் என்ன? - “மே 3 கலவரத்துக்கு முன்னதாக கடந்த 6 ஆண்டுகளில் மணிப்பூரில் ஒருமுறை கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அங்கே பந்த் ஏதும் நடந்ததில்லை. சாலை மறியல் கூட நடக்கவில்லை. சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் நடக்கும் மோதல்கள்கூட கிட்டத்தட்ட முடிந்திருந்தன. அண்டை நாடான மியான்மரில் குகி இனத்தின் சார்பு கட்சியான குகி ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சிக்கு வந்தது. மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படாமல் இருந்ததால் குகி இனச் சகோதரர்கள் மியான்மரிக் இருந்து மிசோரத்துக்கும், மணிப்பூருக்கும் வந்தனர். அதுதான் இந்த மோதலுக்குக் காரணம்.
அதுமட்டுமல்லாது கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பதற்றத்துக்கு மேலும் வழிவகுத்தது” என்று அமித் ஷா கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு செய்தது என்ன? - உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அமித் ஷா, “நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய நாங்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளோம். லண்டன், ஒட்டாவா, சான் ப்ரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் இந்தியத் தூதரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் தடுத்துள்ளோம். 2011-ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தஹாவூர் ஹுசைன் விரைவில் இந்தியாவில் நீதியின் முன் நிறுத்தப்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்” என்றார் அமித் ஷா.
“13 முறை தோற்றுப்போன தலைவர்” - “இங்கே இந்த அவையில் ஒரு தலைவர் (ராகுல் காந்தி) இருக்கிறார். அவரது அரசியல் பயணம் 13 முறை தொடங்கி அத்தனையிலும் முடங்கியுள்ளது. இந்த அவையில் ஒருமுறை அந்த நபர் கலாவதி என்ற துர்பாக்கியவதியைப் பற்றிப் பேசினார். அவர் கலாவதியின் வீட்டுக்குச் சென்று திரும்பியதியும் அவர் வீட்டில் உணவு உண்டதையும் அவரின் ஏழ்மை நிலையைப் பற்றியும் பேசினார். ஆனால், அதன் பிறகு அவருடைய கட்சி 6 ஆண்டுகள் ஆட்சி செய்தது. கலாவதி நிலைமையை மாற்ற என்ன செய்தது? கலாவதிக்கு பாஜக அரசு வீடு, மின்சாரம், சமையல் எரிவாயு, ரேஷன், கழிவறை வசதி என அனைத்தும் செய்து கொடுத்துள்ளது” என்று சாடினார். அமித் ஷாவின் எதிர்வினையோடு மக்களவை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் மக்களவையில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக பேசினார். அதனை வாசிக்க > “முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா... நாட்டையே எரிக்க முயல்கிறீர்கள்” - மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக பேசும்போது, “பாரத மாதா இறந்துவிட்டார் என்கிறீர்களா?” என்று மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மேலும், ராகுல் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், “நீங்கள் இந்தியா கிடையாது” என்றார். | வாசிக்க > “நீங்கள் இந்தியா கிடையாது” - மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி
இதனிடையே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்வரிசையில் இருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தவறாக நடந்து கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். அதன் விவரம்: மக்களவையில் ராகுல் காந்தியின் ‘பறக்கும் முத்தம்’ சர்ச்சை: சபாநாயகரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT