Published : 09 Aug 2023 12:11 PM
Last Updated : 09 Aug 2023 12:11 PM
புதுடெல்லி: ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்துக்காக இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினமான இன்று மகாத்மா காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வராதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "பிரதமரே சபைக்கு வாருங்கள்.." என்று முழக்கங்கள் எழுப்பினர். முழக்கங்களுக்கு இடையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. முழக்கங்கள் அதிகம் ஆனதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மவுன அஞ்சலி: முன்னதாக, 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை நினைவுகூர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், ஹிரோஷிமா நாகசாகி அழிவின் 78வது ஆண்டை நினைவு கூறும் வகையில் அணுகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் மக்களவையில் ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: அதேபோல மாநிலங்களவை காலையில் கூடியதும் அவைத் தலைவர் அன்றைய குறிப்புகளை வாசித்தார். பின்னர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவையில் பேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை நினைவுகூர்ந்து நாங்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் ஆனால், இன்று துஷார் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார் இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். உறுப்பினர்களின் செயலுக்கு அவைத்தலைவர் தனது அதிருப்தியை தெரிவித்தார். தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, ‘ஊழலே வெளியேறு’, ‘வாரிசு அரசியலே வெளியேறு’ என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT