Published : 09 Aug 2023 05:42 AM
Last Updated : 09 Aug 2023 05:42 AM
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களை துரோகிகள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்ததால் அவர் மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய அமைச்சரும், அவை முன்னவருமான பியூஷ் கோயல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களை துரோகிகள் என்று விமர்சித்தார். இதற்கு மாநிலங்களவையில் நேற்று கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவர்களை துரோகிகள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எப்படி அழைக்கலாம். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.
இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியபோது, ஜெகதீப் தன்கர் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக, ஜெய்ராம் ரமேஷ் என் அறையில் வந்து என்னை சந்தித்து பியூஷ் கோயல் கூறிய வார்த்தை தொடர்பாக புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக நான் ஆய்வு செய்கிறேன் என்றும், அவைக் குறிப்புகளில் அந்த வார்த்தை இடம்பெறாது என்றும் அவரிடம் தெரிவித்தேன்’’ என்றார்.
அப்போது பியூஷ் கோயல் கூறும்போது, “நான் அவையில் பயன்படுத்தாத வார்த்தை எதையும் இங்கு பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்றார்.
தொடர்ந்து அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. மேலும் பியூஷ் கோயல் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள ஜெகதீப் தன்கர் மறுத்தார். இதைத் தொடர்ந்து அவையிலிருந்து இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘மாநிலங்களவையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை அமைச்சர் பியூஷ் கோயல் பயன்படுத்தினார். இதைக் கண்டித்து இண்டியா கூட்டணியின் தலைவர்கள் அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவர் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT