Published : 31 Jul 2014 08:22 PM
Last Updated : 31 Jul 2014 08:22 PM

உண்மைகளைத் திரிக்கிறார் நட்வர் சிங்: காங்கிரஸ் தாக்கு

2004ஆம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல் காந்தியே காரணம் என்று நட்வர் சிங் கூறியிருப்பதையடுத்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொடர்ந்து நட்வர் சிங்கை தாக்கி வருகின்றனர்.

அதாவது சோனியா பிரதமரானால் அவரும் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி போல் கொல்லப்பட்டு விடுவார் என்று அஞ்சி ராகுல் காந்தி அவரைப் பிரதமர் ஆவதிலிருந்து தடுத்தார் என்று நட்வர் சிங் கூறியுள்ளார்.

நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நாட் இனஃப் (One Life is Not Enough ) என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, “காங்கிரஸ் கட்சியில் உருவாகி, வளர்ந்த ஒருவர் உண்மைகளைத் திரித்துக் கூறி, துஷ்பிரயோகம் செய்வது துரதிர்ஷ்டவசமானது.

புத்தக விற்பனைக்காக பரபரப்பான முறையில் உண்மையற்ற, அடிப்படையற்ற விஷயங்களைக் கூறுவதை அனுமதிக்க முடியாது” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் இது குறித்து மானநஷ்ட வழக்குத் தொடரப்படுமா என்ற கேள்விக்கு அவர் கூறும்போது, “அரசியல் விவகாரங்கள் அரசியல் மட்டத்திலேயே தீர்க்கப்படும்” என்றார்.

நட்வர் சிங் கருத்து குறித்து பெயர் கூற விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த விவகாரமெல்லாம் காலத்தின் போக்கில் அழிந்து விடும். நிற்காது, எனவே சட்ட நடவடிக்கை என்ற பெயரில் அதற்கு நீண்ட ஆயுளை வழங்கிவிடுதல் கூடாது என்றார்.

நம்பிக்கையைப் பெற்ற ஒரு மனிதர் செய்யும் துரோகம் இது என்று அவர் நட்வரைச் சாடினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x