Published : 08 Aug 2023 02:47 PM
Last Updated : 08 Aug 2023 02:47 PM
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ‘இண்டியா’ கூட்டணியின் அவநம்பிக்கையின்மையின் வெளிப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘அவர்கள் யாரெல்லாம் அவர்களுடன் இருக்கிறார்கள் என்று சோதித்துப் பார்க்க இந்த நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ‘கமாண்டியா’ என்று விமர்சித்தார். மாநிலங்களவையில் திங்கள்கிழமை டெல்லி சேவைகள் மசோதாவை நிறைவேற்றி அரையிறுதியில் வெற்றி பெற்றதற்காக பாஜக எம்.பி.களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, திங்கள்கிழமை மாநிலங்களவையில் நடந்த டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதத்தை சில எதிர்க்கட்சி எம்.பிக்கள், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் அரையிறுதி என்று அழைத்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று பாஜக எம்பிகளிடம் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனது பேச்சில் கடந்த 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசிய பிரதமர் மோடி, அப்போதே 2023-ம் ஆண்டு மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தாம் கூறியதை நினைவுகூர்ந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்கி பேசிய பிரதமர் மோடி, "சமூக நீதியைப் பேசும் அவர்கள், வாரிசு அரசியல், ஊழல் அரசியல் மூலமாக சமூக நீதியை மீறுகின்றனர். மேலும் வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
இதனிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகோய் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். வாசிக்க > மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது: கேள்விகளை அடுக்கிய கவுரவ் கோகோய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT