Published : 08 Aug 2023 07:03 AM
Last Updated : 08 Aug 2023 07:03 AM
புதுடெல்லி: 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான சிலை அமையவுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட உயரமானதாக இருக்கும்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் மலைநகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லவாசா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான டார்வின் பிளாட்பார்ம் இன்பிராஸ்டிரக்சர் (டிபிஐஎல்)நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ முடிவு செய்திருக்கிறது.
இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறந்துவைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. திறப்பு விழாவுக்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்க நாட்டுத் தூதர்களை அழைக்கவும் தனியார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
குஜராத்தில், சர்தார் வல்லபபாய்படேலுக்கு மிகப்பெரிய சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இது 182மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.தற்போது பிரதமர் மோடிக்கு அமைக்கப்படும் சிலை 190 மீட்டர் முதல்200 மீட்டர் உயரம் வரை இருக்கும்.
இதுகுறித்து டிபிஐஎல் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜய் ஹரிநாத் சிங் கூறியதாவது: நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்கபிரதமர் மோடி தன்னால் முடிந்தஅனைத்தையும் செய்து வருகிறார்.அவரிடமிருந்து ஒரு தொலைநோக்கு பார்வையை நமது நாடுபெற்றுள்ளது. இந்த சிலை நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அமையும்.
இந்த சிலை முடிவடைந்து திறக்கப்படும் பட்சத்தில் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
சிலை அமைக்கப்படும் வளாகத்தில் நாட்டின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் அருங்காட்சியகம், ‘புதிய இந்தியா’வின் திட்டங்கள், கண்காட்சி கூடம் ஆகியவையும் இடம்பெறும். கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் திரையிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT