Published : 07 Aug 2023 10:50 PM
Last Updated : 07 Aug 2023 10:50 PM
புதுடெல்லி: டெல்லி அவசர சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது.
டெல்லி அவசர சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 131 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து 102 வாக்குகளும் பதிவாகின. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு அளித்தன.
மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆம் ஆத்மியின் ராகவ் சதா, "டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் விரும்பினர். ஆனால், தற்போதைய பாஜக தனது சொந்தக் கட்சித் தலைவர்களை பின்பற்றாமல் செயல்படுகிறது. டெல்லியில் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு, இந்த மசோதா மூலம் பாஜக எதிர்வினையாற்றுகிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் பேசுகையில், "இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு எந்தவித தார்மீக அதிகாரமும் இல்லை. இந்த மசோதா டெல்லிக்கு ஒரு முன்மாதிரி என்று அரசாங்கம் நினைக்கிறது. ஏன் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் கூட இன்று நீதிமன்றத்தில் இந்த அரசு ஒரு முன்மாதிரியை கண்டுபிடித்துள்ளது" என்று விமர்சனம் செய்தார்.
முன்னதாக மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை. நாட்டின் தலைநகரில் பயனுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்த மசோதா, காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த அதே அதிகாரங்களை டெல்லி அரசுக்கு வழங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே தற்போது இம்மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது" என்று கூறினார்.
முன்னதாக, டெல்லி அவசர சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்றிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு இன்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவர் விவாதத்தில் பங்கேற்க வந்தார்.
அவசர சட்டத்தின் பின்னணி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதாக இந்த மோதல் முற்றியது. இதையடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் என்பதை உறுதிப்படுத்தக் கோரி ஆளும் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணை நிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், டெல்லியின் அதிகாரம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றும், வேண்டுமானால் இவ்விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இதையடுத்து, தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணை நிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT