Published : 07 Aug 2023 05:17 PM
Last Updated : 07 Aug 2023 05:17 PM

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய 12 வழக்குகளில் சிபிஐ விசாரணை: மத்திய அரசு

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி டெல்லியில் போராட்டம். | படம்: ஷிவ் குமார் புஷ்பாகர்

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய 12 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய மாநில அரசுகள் சார்பாக அட்டர்னி ஜெனரல் (ஏ.ஜி) வெங்கட்டரமணி மற்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வழக்குகளைப் பிரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

அட்டர்னி ஜெனரல், “வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அரசு நிலவிவரும் சூழலை மிகவும் கவனமுடன் கையாண்டு வருகிறது" என்றார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணையின்போது ஏதேனும் வழங்குகள் தெரியவந்தால், அதனையும் சிபிஐ விசாரிக்கு" என்று தெரிவித்தார். இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மணிப்பூர் மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) நேரில் ஆஜரானார் என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கடந்த 1-ம் தேதி நடந்த விசாரணையின் போது சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, "மணிப்பூர் வன்முறை தொடர்பாக 6,523 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 11 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ மூலமாக விசாரிக்கலாம், விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்தலாம்" என்றும் தெரிவித்திருந்தார்.

முந்தைய விசாரணையின்போது, வன்முறை நடந்தபோது மாநில காவல் துறையின் போக்கினை வன்மையாக கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "வழக்குகளை பதிவு செய்வதில் மாநில காவல் துறை மிகவும் காலதாமதம் செய்துவிட்டது. மே மாதம் வன்முறை தொடங்கியதில் இருந்து இரண்டொரு வழக்குகள் பதியப்பட்டதை தவிர யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை மிகவும் மந்தகரமாக நடந்தது. இது மே மாதம் தொடங்கி ஜூலை வரையில் மணிப்பூரில் சட்டம் நடைமுறையில் இல்லையோ என்ற எண்ணத்தினை தருகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலவும் பதற்றம்: மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி இனத்தவர்கள் கடந்த மே 3-ம் தேதி பேரணி நடத்தினர். அதில் ஏற்பட்ட மோதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், விஷ்ணுபூர்-சூரசந்த்பூர் எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த சிலர் தங்கள் வீடுகளை பாதுகாப்பதற்காக விஷ்ணுபூர் மாவட்டத்தின் உகா தம்பக் கிராமத்துக்கு திரும்பினர். இங்கு நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் தந்தை-மகன் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சிலர் ஆயுதங்களுடன் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பூஜாங்க் மற்றும் சாங்டோ கிராமத்துக்குள் புகுந்து சிறிய ரக ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர், சிலர் காயம் அடைந்தனர்.

அதே நேரத்தில் விஷ்ணு மாவட்டத்தின் தேரகோங்சாங்பி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் ஒருவர் உட்பட 3 பேர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர். இதேபோல் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இரு கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாங்கோல் பகுதியில் சில வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

மணிப்பூரில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இம்பாலில் போராட்டங்களும் நடந்தன. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் குண்டு காயத்துடன் கைது செய்யப்பட்டார். மணிப்பூருக்கு மேலும் 10 கம்பெனி பாதுகாப்பு படையினரை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x