Published : 07 Aug 2023 05:42 AM
Last Updated : 07 Aug 2023 05:42 AM
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2-வது முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த உள்ளது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் தொழில் துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இந்த குறியீட்டை அடிப்படையாக கொண்டு, அகவிலைப்படியை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான வரைவை உருவாக்கி, அதை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்வது வழக்கம்.
அகவிலைப்படி உயர்வு குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறியதாவது: நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துக்கான தொழில் துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஜூலை 31-ம் தேதி வெளியானது. இந்த குறியீட்டின் அடிப்படையில், மத்திய அரசு அகவிலைப்படியை கணக்கிடுகிறது. தற்போதைய விலைவாசி சூழலில் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு 3 சதவீத அளவிலேயே உயர்த்தும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள், அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT