Published : 07 Aug 2023 05:39 AM
Last Updated : 07 Aug 2023 05:39 AM
புதுடெல்லி: அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரயில்நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன.
இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, காணொலி மூலம் அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டில், ‘புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறது. புதிய சக்தி, புதிய உத்வேகம், புதிய இலக்குகளுடன் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்திய ரயில்வே வரலாற்றில் தற்போது புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள 1,300 முக்கிய ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக, அதில் 508 ரயில் நிலையங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும். மத்திய பிரதேசத்தில் 34 நிலையங்கள் ரூ.1,000 கோடியிலும், மகாராஷ்டிராவில் 44 நிலையங்கள் ரூ.1,500 கோடியிலும், தமிழகத்தில் 18 நிலையங்கள் ரூ.515 கோடியிலும் புதுப்பிக்கப்பட உள்ளன. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கிய
ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்துக்காக ரயில்வே அமைச்சகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் மூலம் நாட்டில் நிலையான அரசை மக்கள் தேர்ந்தெடுத்ததுதான் இதற்கு முதல் காரணம். அரசு லட்சியமிக்க முடிவுகளை எடுத்து மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டது 2-வது காரணம். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதைகளின் நீளம், தென்னாப்பிரிக்கா, உக்ரைன், போலந்து, இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள மொத்த ரயில்வே நெட்வொர்க்கைவிட அதிகம்.
தற்போது ரயில் பயணத்தை மத்திய அரசு சொகுசாக மாற்றியுள்ளது. ரயில் நிலையங்கள், காத்திருப்பு அறைகளில் பயணிகளுக்கு இலவச வைஃபை உட்பட பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பல ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதன் மூலம், வளர்ந்த நாடுகளுக்கு நிகராக இங்கும் புதிய சூழல் ஏற்படும். ரயில் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா மட்டுமின்றி, அதன் அருகில் உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளும் மேம்படும்.
நம் நாட்டில் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியினர் இன்னும் பழைய முறைகளை பின்பற்றுகின்றனர். அவர்களும் எதுவும் செய்வது இல்லை, யாரையும் எதையும் செய்யவிடுவதும் இல்லை. நவீன நாடாளுமன்ற கட்டிடம் கட்டியது, டெல்லி ராஜபாதையை மேம்படுத்தி கடமை (‘கர்தவ்ய’) பாதையாக மாற்றியது ஆகியவற்றைகூட எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர்.
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு 70 ஆண்டுகாலமாக அவர்கள் நினைவுச் சின்னம் கட்டவில்லை. நாங்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தை கட்டியபோது, வெட்கப்படாமல் அதையும் விமர்சித்தனர். எதிர்மறையான அரசியலில் இருந்து மீண்டு, ஆக்கப்பூர்வமான அரசியல் பாதையில் நாங்கள் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT