Published : 06 Aug 2023 12:14 PM
Last Updated : 06 Aug 2023 12:14 PM

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டினார்.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் நோக்கில் மத்திய அரசு அமிர்த பாரத நிலையம் எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வளர்ந்த நாடு எனும் இலக்கை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. அதற்கான அமிர்த கால தொடக்கத்தில் நாடு உள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த திட்டம் ஒரு புதிய அத்தியாயமாக தொடங்குகிறது. இதற்கான தீர்மானங்கள் புதிய ஆற்றல், புதிய உத்வேகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள 1,300 முக்கிய ரயில் நிலையங்கள் அமிர்த பாரத ரயில் நிலையங்களாக மறுசீரமைக்கப்பட உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களுக்கான மறுசீரமைப்புப் பணிகள் இன்று தொடங்குகின்றன. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும். இதன்மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும். ரயில் நிலையங்கள் எளிய மக்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும்.

தற்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் இந்தியா மீது குவிந்துள்ளது. இந்தியாவின் கவுரவம் உலக அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா விஷயத்தில் உலகின் அணுகுமுறை மாறி இருக்கிறது. இதன் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு மெஜாரிட்டி உள்ள அரசை மக்கள் கொண்டு வந்தது. இரண்டாவது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முழு மெஜாரிட்டி உள்ள அரசு நாட்டின் சவால்களுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் பெரிய முடிவுகளை தொடர்ந்து எடுத்தது.

துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் இன்றும் பழைய முறையையே பின்பற்றுகின்றனர். அவர்கள் தாங்களாக எதையும் செய்ய மாட்டார்கள். வேறு யாரையும் செய்ய விடமாட்டார்கள். நாடு நவீன நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியது. நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் நாடாளுமன்றம். அதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால் இந்த எதிர்க்கட்சியினர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எதிர்த்தனர். கடமைப் பாதையை மீண்டும் உருவாக்கினோம்.

நாட்டிற்காக துணிச்சலுடன் உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களுக்கு போர் நினைவுச் சின்னம் கூட இதற்கு முன் கட்டவில்லை. நாம் தேசிய போர் நினைவிடத்தை கட்டியபோது அதை பகிரங்கமாக அவர்கள் விமர்சித்தார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை உலகிலேயே மிக உயரமான சிலை. ஒவ்வொரு இந்தியனும் அதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்கள் யாரும் அந்த சிலையை பார்வையிட்டதில்லை. ஆனால் எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, நாங்கள் நேர்மறையான அரசியலின் பாதையில் செல்கிறோம்" என தெரிவித்தார்.

அம்ரித் பாரத நிலையம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கும்முடிப்பூண்டி, ஜோலார்பேட்டை சந்திப்பு, கரூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, நாகர்கோவில் சந்திப்பு, பெரம்பூர், போத்தனூர் சந்திப்பு, சேலம் சந்திப்பு, தென்காசி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம் சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு ஆகிய 18 ரயில் நிலையங்கள் ரூ. 515 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் சிட்டி சென்ட்டர் போல மேம்படுத்தப்படும் என்றும், ரயில் நிலையத்தின் கட்டிடம் தரம் உயர்த்தப்படும் என்றும், வணிக மண்டலம், உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு இட வசதிகள் ஆகியவை இந்த மறுசீரமைப்பு ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில், பல அடுக்கு வாகன நிறுத்தமிடம், மின்னுர்த்தி, நகரும் படிக்கட்டுகள், டிராவலேட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும் என்றும், ஒருங்கிணைக்கப்பட்ட பலதரப்பட்ட இணைப்பால் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் சமூக பொருளாதார செயல்பாடுகளின் மையமாக அமையும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x