Published : 21 Jul 2014 03:24 PM
Last Updated : 21 Jul 2014 03:24 PM

பாலஸ்தீனம் மீதான இந்தியக் கொள்கையில் மாற்றமில்லை: மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டம்

பாலஸ்தீனம் மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

காஸா தாக்குதல் குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல், இன்று மாநிலங்களவையில் காஸா தாக்குதல் மீதான விவாதம் தொடங்கியது.

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "காஸா மீது தாக்குதல் வலுத்து வருகிறது. இந்தியா மவுனம் காத்துவருவது, வெளியுறவு கொள்கையில் இந்தியா மாற்றம் செய்துள்ளதா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

பாலஸ்தீனத்தில் நடைபெறும் படுகொலையை இந்தியா வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்திய அரசு, இந்திய மக்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் காஸா பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். அங்கு நடைபெறும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் பெரும் அளவில் அப்பாவி பொதுமக்களும், அவர்களது உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் பாதிக்கும் மேலானது மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே கிடைக்கிறது. இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை கண்டித்து மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்றார்.

ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்துக:

காஸா மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என டி.ராஜா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்தியா நிலைப்பாடு என்ன?

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இஸ்ரேல் தாக்குதல் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கனிமொழி பேசினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, காஸா குறித்து ஜூலை 15 ஆம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்ட நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சுஷ்மா திட்டவட்டம்

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக பேசிய வெளியிறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே நாம் நல்லுறவையே கொண்டுள்ளோம். இது தொடர்பாக, பிரிக்ஸ் மாநாட்டிலும் நாங்கள் பேசியுள்ளோம்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்தி, அங்கிருக்கும் போர்ச் சூழலை தணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எகிப்தின் அமைதி பேச்சுவார்த்தை அழைப்பை இரு நாடுகளும் ஏற்க வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை" என்றார்.

மேலும், "இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்பு ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த முடியாது" என்று யெச்சூரிக்கு அவர் பதிலளித்தார்.

இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர வேணடும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனை நிராகரித்த மாநிலங்களவையின் துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், இந்த விவகாரம் மீது எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ள விதி இல்லை என்று தெரிவித்தார்.

அதன் பின்னர், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தன.

காங்கிரஸ் வழியில் பாஜக?

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து, அவர் நாடாளுமன்றத்தில் விவரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியதற்கு சுஷ்மா அளித்த பதில்:

"முந்தைய அரசில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று வந்த பின்னர். அது குறித்து எதனையும் அவையில் விவரித்ததில்லை. அதே போல, 2008-ஆம் ஆண்டு நடந்த காஸா தாக்குதலில், 1,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டபோது, இப்போது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்போது காங்கிரஸுக்கு தாங்கள் அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவது குறித்து பேசக் கூட இல்லை" என்றார் சுஷ்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x