Published : 05 Aug 2023 11:06 PM
Last Updated : 05 Aug 2023 11:06 PM
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கிய சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் நிலவுக்கு மிகவும் அருகில் தற்போது சந்திரயான்-3 விண்கலம் உள்ளது. சந்திரயான்-3 பயணத்தில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 தற்போது சந்திர ஈர்ப்பு விசையை உணர்கிறது. நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை நாளை இரவு 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 7.15 மணியளவில் நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டது சந்திரயான்-3. அடுத்த 20 நாட்கள் சந்திரயான் நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின் அது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும்.
சந்திரயான்-3 விண்கலம்: சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (சாஃப்ட் லேண்டிங்) தரையிறக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment