Published : 05 Aug 2023 06:43 PM
Last Updated : 05 Aug 2023 06:43 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் 4ம் ஆண்டு இன்று. ஸ்ரீநகரில் நடைபெற்ற அரசு விழாவில், பயிற்சி நிறைவு சான்றிதழ், பணி நியமன சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நடைபெறும் போராட்டங்கள், வருடத்திற்கு 150 நாட்கள் பள்ளி, கல்லூரிகளை மூடும் நிலை, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல் எறிதல், பிரிவினைவாதம் ஆகியவை முடிவுக்கு வந்துள்ளன.
ஆற்றங்கரைகளில் தரமான நேரத்தை செலவிட்ட பிறகு இளைஞர்கள், கைகளில் கிதார் இசைக்கருவியுடன் நள்ளிரவில் வீடு திரும்புவதை பார்க்க முடிகிறது. கடந்த காலங்களில் சூரியன் மறையும் முன் மக்கள் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இன்று, சந்தை, பூங்கா என வெளியிடங்களில் மக்கள் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் தோல்வி அடைந்துள்ளது. அமைதியை மக்கள் அனுபவிக்கிறார்கள். மாற்றத்தின் தொடக்க காலம்தான் என்றாலும், இது மிகப் பெரிய சாதனை. மும்பை பங்குச் சந்தையுடன் ஜம்மு காஷ்மீர் அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே செதுக்கி வருகிறார்கள். இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது" என தெரிவித்தார்.
Today I proudly wanna to say that my #Kashmir has changed a lot not only for the boys but also for Us. It was not possible before abrogation of 370 & 35A. Thank you GOI. pic.twitter.com/5zU9vgUAoL
— Nusrat Fatima (@knusrata) August 4, 2023
இதனிடையே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண்ணான நுஸ்ரத் பாத்திமா வெளியிட்ட ட்விட்டர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே இரு கைகளையும் விடுத்து சுதந்திர உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு, "எனது காஷ்மீர் மிகப் பெரெிய அளவில் மாறி விட்டது என்பதை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன். ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும். சட்டப்பிரிவு 370 மற்றும் 35A நீக்கத்திற்கு முன் இது சாத்தியமல்ல" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிடிபி கட்சி பிரிவு 370 ரத்து குறித்து கருத்தரங்கு நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் விவரம்: வீட்டுக் காவலில் முன்னாள் முதல்வர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT