Published : 05 Aug 2023 01:43 PM
Last Updated : 05 Aug 2023 01:43 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நான்காவது ஆண்டு தினத்தை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, பிடிபி கட்சி பிரிவு 370 ரத்து குறித்து கருத்தரங்கு நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோக்களுடன் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களுடன் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். நள்ளிரவில் நடந்த அடக்குமுறைக்குப் பின்னர் எனது கட்சியைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக காவல் நிலையங்களில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ள பொய்யான அறிக்கைகள் அவர்களின் அச்ச உணர்வினால் உந்தப்பட்டுள்ளன.
ஒருபுறம், சட்டத்துக்கு புறம்பாக 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாட காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ராட்சஷ பேனர்கள் நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மக்களின் இயல்பான உணர்வுகளை அடக்கும் வகையில் மிருத்தனமான அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்
எதற்காக ஆக.5-ம் தேதிக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் போலீஸ் பிடிபி கட்சித் தலைவர்களை காவல் எடுக்கிறது. சட்டவிரோதமாக பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடும் தமாஷ்களுக்கு பாஜக அரசு இலவச அனுமதி அளித்துள்ளது. இவை அனைத்தும் நாட்டுமக்களின் கருத்துக்களை திசைதிருப்பவே செய்யப்படுகின்றன. மாநிலத்தில் இயல்பு நிலை இருப்பதாக காட்டுவதற்காக உருவாக்கப்படும் போலியான இந்தக் கதைகள் அவர்களின் சட்டவிரோத செயல்களையே காட்டுகிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிடிபி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நினைவு தினத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்த மக்கள் ஜனநாயக கட்சி ஸ்ரீநகர் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் ஷேர் இ- காஷ்மீர் பூங்காவில் நடக்க இருந்த அந்த நிகழ்ச்சிக்கு ஒத்த சிந்தனையுடைய கட்சிகளுக்கு பிடிபி அழைப்பு விடுத்திருந்தது.
இதுகுறித்து பிடிபியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"ஆக.4-ம் தேதி மாலை 5 மணிக்கு எந்தவித காரணமும் கூறாமல் எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரத்தில், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை கொண்டாடும் வகையில், நேரு பூங்காவில் நிகழ்ச்சிக்கும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து எஸ்கேஐசிசி வரை பேரணி நடத்தவும் பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகர நிர்வாகத்தின் இந்த இரட்டை செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது காஷ்மீர் நிர்வாகம் மற்றும் நாடு இரண்டும் சட்டம் மற்றும் அரசியலமைப்பு படி இல்லை மாறாக பாஜகவின் அரசியல் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்ற எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தங்கள் கட்சி அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, "ஆக.5, 2019 நிகழ்வுக்கு எதிராக ஒத்தக்கருத்துடைய கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி அலுவலகத்துக்கு ஜம்மு காஷ்மீர் போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை அவர்களின் பதற்றத்தையும், கடந்த 4 ஆண்டுகளாக மாநிலத்தில் முன்னேற்றேம் ஏற்பட்டுள்ளது என்ற அவர்களின் முழக்கங்களின் தோல்வியையும் காட்டுகின்றது" என்று தேசிய மாநாட்டுக் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப் பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் ஆக. 2 தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
I’ve been put under house arrest along with other senior PDP leaders today. This comes after a midnight crackdown where scores of my party men are illegally detained in police stations. GOIs false claims about normalcy to the SC stands exposed by theirs actions driven by… pic.twitter.com/gqp25Ku2CJ
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 5, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT