Published : 05 Aug 2023 10:50 AM
Last Updated : 05 Aug 2023 10:50 AM
புதுடெல்லி: ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்த நிலையில் அவருக்கு விருந்தளித்து மகிழ்ந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இwத விருந்து நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) டெல்லி அரசு குடியிருப்பில் உள்ள லாலு மகள் மிசா பாரதியின் வீட்டில் நடைபெற்றது.
மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனைக்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த மகிழ்வைக் கொண்டாட ராகுல் காந்திக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு விருந்தளித்தார்.
இந்த விருந்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மலர் பூங்கொத்து கொடுத்து கட்டி அணைத்து லாலு வரவேற்றார்.
இந்த விருந்தில் பிஹாரின் புகழ்பெற்ற மேற்கு சம்பாரன் பகுதியின் ஆட்டிறைச்சியின் சிறப்பு உணவு பறிமாறப்பட்டது. இதற்கு அந்த ஆட்டிறைச்சியை பிஹாரிலிருந்து விமானத்தில் லாலு வரவழைத்திருந்தார். இந்த விருந்தில் லாலுவின் இளைய மகனும் பிஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா'வின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இச்சூழலில் ராகுலுக்கு கிடைத்த நீதிமன்ற தடை, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர்களை உற்சாகப்படுத்தும் இந்த உத்தரவை நேற்று லாலுவுடன் கொண்டாடினார் ராகுல். இந்த விருந்துக்குப் பின் அனைவரும் அரசியல் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
வழக்கு பின்னணி: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, "இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT