Last Updated : 05 Aug, 2023 06:30 AM

1  

Published : 05 Aug 2023 06:30 AM
Last Updated : 05 Aug 2023 06:30 AM

ஹரியாணா கலவரத்தில் சைபர் குற்றவாளிகள் சதி

கோப்புப்படம்

புதுடெல்லி: ஹரியாணாவின் நூ, சைபர் குற்றவாளிகள் அதிகமுள்ள நகரமாக உள்ளது. இவர்கள் இங்கிருந்தபடி நாடு முழுவதிலும் இணையதளம் மூலமாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இங்குள்ள சைபர் குற்றவாளிகள் மீது நாடு முழுவதிலும் சுமார் 28,000 வழக்குகள் உள்ளன. இதில் சுமார் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பாக கடந்த மாதம் 27-ம் தேதி இரவு நூவின் 14 கிராமங்களில் ஹரியாணா காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் சுமார் 100 பேர் பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு நூவிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தினர் தலைமை ஏற்றிருந்தனர். ஹரியாணா முழுவதுக்கும் இது ஒன்றுதான் சைபர் காவல் நிலையம் ஆகும்.

இதனால் இந்த சைபர் காவல்நிலைய போலீஸார் மீது நூவின் குற்றவாளிகள் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தை இவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வன்முறையை இவர்கள்தான் முதலில் தொடங்கி வைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கலவரக்காரர்களால், முதலாவதாக சைபர்காவல் நிலையம் சூறையாடப்பட்டது இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருந்த பல முக்கிய ஆவணங்களும், கணினிகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹரியாணா உள்துறை கூடுதல் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் கூறும்போது, “இந்த கலவரத்தில் பயனடைந்த ஒரே தரப்பினராக சைபர் குற்ற வாளிகள் இருப்பதால் இந்த சந்தேகம் வலுக்கிறது. இவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்காக அமைத்திருந்த 70 ஆக்கிரமிப்புகளை சைபர் போலீஸார் முன்னின்று அகற்றினர். இந்தக் கோபமும் இவர்களுக்கு இருந்துள்ளது. இதற்கு முன்பு 3 ஆன்மீகஊர்வலங்கள் இங்கு நடைபெற்ற போதிலும் அவற்றால் எந்தக் கலவரமும் ஏற்படவில்லை. இருப்பினும் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை விசாரணையின் முடிவில்தான் சொல்ல முடியும்” என்றார்.

இதனிடையே, ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க 3 காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 போலி கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘ஜெய் பாரத மாதா வாஹினி’ எனும் அமைப்பின் தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

நூவில் தொடங்கிய கலவரம், மதக்கலவரமாக மாறி அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் பரவியது. இது தொடர்பான 93 வழக்குகளில் நூ- 46, குருகிராம்- 23, பல்வல்-18, பரீதாபாத் மற்றும் ரிவாரியில் தலா 3 என பதிவாகியுள்ளன. இதில் நேற்று வரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 78 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது விடுப்பிலிருந்த நூ மாவட்ட எஸ்.பி. வருண் சிங்லா மாற்றப்பட்டு, அங்கு நரேந்திரா பிஜார்னியா அமர்த்தப்பட்டுள்ளார்.

கலவரம் காரணமாக முக்கிய முஸ்லிம்களால் ஒரு கோரிக்கை வெளியிடப்பட்டது. இதை ஏற்று நேற்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் சிறப்புத் தொழுகையை பலரும் தங்கள் வீடுகளிலேயே நடத்தினர். ஒருசில மசூதிகளில் மட்டுமே தொழுகைகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x