Published : 05 Aug 2023 07:16 AM
Last Updated : 05 Aug 2023 07:16 AM
புதுடெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் கனரக தொழில்துறை செயலாளராக இருந்த இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் நவம்பர் 18-ல் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவரது நியமனத்தை எதிர்த்து அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே விவகாரம் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமர்வு விசாரித்து விட்டதாகவும், மீண்டும் அதேபோன்ற மனுவை விசாரிக்க முடியாதென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அருண் கோயல், வரும் 2025-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT