Published : 04 Aug 2023 04:36 PM
Last Updated : 04 Aug 2023 04:36 PM
புதுடெல்லி: ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் பற்றி மக்களவையில் அமைச்சர் அஸ்வின் விளக்கம் அளித்தார். ரயில் விபத்துகளை தடுக்கும் ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பான கவாச் பற்றி மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ரயில்வே துறையில் கவாச் பாதுகாப்பு பற்றி மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர்களான ஆ.ராசா, கனிமொழி மற்றும் எம்பி.க்கள் கிருஷ்ணதேவராயலு, உதய் பிரதாப் சிங் ஆகியோர் சில கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் எழுத்துமூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டிருப்பதாவது: கவாச் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிக தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (Automatic Train Protection-ATP) அமைப்பு ஆகும்.
கவாச் லோகோ பைலட்டுக்கு ரயில் குறிப்பிட்ட வேகத்தில் ஓட உதவுகிறது. இன்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒருவேளை லோகோ பைலட் தோல்வியுற்றால், தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்த கவாச் வழி செய்கிறது. மேலும் மழை, பனி போன்ற சீரற்ற காலங்களில் ரயிலை பாதுகாப்பாக இயக்க உதவுகிறது. கவாச் பாதுகாப்பு அமைப்பானது முதலில் பிப்ரவரி 2016 முதல் பயணிகள் ரயில்களில் பயன்படுத்தப்படுவதற்கு களச் சோதனைகள் தொடங்கப்பட்டன. அதில்பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலும் சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டாளரின் மதிப்பீடுகள் அடிப்படையிலும் கவாச் தொழில் நுட்ப அமைப்புக் கருவிகளை விநியோகம் செய்வதற்கு 2018-19 இல் மூன்று நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
ஜூலை 2020 இல் கவாச் ஒரு தேசிய ஏடிபி அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தென் மத்திய ரயில்வேயில் கவாச் இதுவரை 1465 ரூட் கிமீ பாதை என்ற அளவில் பொருத்தப்பட்டுள்ளது. 121 இன்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தெலங்கானாவில் 684 ரூட் கிலோ மீட்டர், ஆந்திரப் பிரதேசத்தில் 66 ரூட் கிலோ மீட்டர், கர்நாடகாவில் 117 ரூட் கிலோ மீட்டர், மகாராஷ்டிராவில் 598 ரூட் கிலோ மீட்டர் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கவாச் பாதுகாப்பு பொறிமுறையை டெல்லி- மும்பை, டெல்லி-அவுரா ஆகிய சுமார் 3 ஆயிரம் ரூட் கிலோ மீட்டர் ரயில் பாதைகளில் பொருத்துவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதையில் கவாச் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, மேற்கு வங்காள மாநிலத்தில் 229 ரூட் கிலோ மீட்டர், ஜார்கண்ட் 193 ரூட் கிலோ மீட்டர், பிஹார் 227 ரூட் கிலோ மீட்டர், உத்தரபிரதேசம் 943 ரூட் கிலோ மீட்டர், டெல்லி 30 ரூட் கிலோ மீட்டர், ஹரியானா 81 ரூட் கிலோ மீட்டர், ராஜஸ்தான் 425 ரூட் கிலோ மீட்டர், மத்திய பிரதேசம் 216 ரூட் கிலோ மீட்டர், குஜராத் 526 ரூட் கிலோ மீட்டர், மகாராஷ்டிரா 84 ரூட் கிலோ மீட்டர் என்ற வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய ரயில்வே மேலும் 6 ஆயிரம் ரூட் கிலோ மீட்டர் ரயில் பாதைகளில் கவாச் பாதுகாப்பு அமைப்பு பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. இப்போதைக்கு கவாச் பாதுகாப்பு தொழில்நுட்பக் கருவிகளை உற்பத்தி செய்வதற்காக மூன்று இந்திய நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கவாச் திறனை அதிகரிக்கவும், செயல்படும் அளவை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கவாச் விற்பனை நிறுவனங்களை அதிகரிக்கவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது.
கவாச் செலவு: ரயில் நிலைய உபகரணங்கள் உட்பட இருப்புப் பாதைகளில் கவாச் தொழில் நுட்பத்தைப் பொருத்துவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. லோகோக்களில் பொருத்துவதற்கு ஒரு லோகோவிற்கு 70 லட்சம் ரூபாய் ஆகிறது.
ரூ.710.12 கோடி நிதி ஒதுக்கீடு: கவாச் பொருத்துவதற்காக இதுவரை 351 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2023-2024 பட்ஜெட்டில் கவாச் பாதுகாப்பு தொழில் நுட்பம் பொருத்துவதற்காக 710 கோடியே 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக: இந்திய ரயில்வே மாநில வாரியாக நிதி ஒதுக்குவதில்லை, மண்டல வாரியாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனால் கவாச் பாதுகாப்பு அமைப்பு பொருத்துவதற்கான திட்டங்கள் மண்டல வாரியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT