Published : 04 Aug 2023 01:26 PM
Last Updated : 04 Aug 2023 01:26 PM

‘பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி உண்டு; வீடு வழங்கும் திட்டம் இல்லை’ - மத்திய அரசு பதில் 

திமுக எம்.பி கனிமொழி சோமு

புதுடெல்லி: பத்திரிகையாளர்களர்களுக்கான நலத்திட்டங்களின் கீழ் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுகிறது. வீட்டுமனையோ, சலுகை விலையிலான வீடுகளோ அளிக்கும் திட்டம் இல்லை என்று திமுக எம்.பி கனிமொழி சோமு கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

“நோய் மற்றும் விபத்து காரணமாக உயர் சிகிச்சை தேவைப்படும் அல்லது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறதா? அங்கீகார அட்டை இல்லாத பத்திரிகையாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமா? அவர்களுக்கு சலுகை விலையில் வீடோ, வீட்டுமனையோ வழங்கும் திட்டமிருக்கிறதா?” என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய செய்தி ஒலிபரப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அளித்த பதில்: “பெரும் நோய்களால் அவதிப்படும் பத்திரிகையாளர்களுக்கு உயர் சிகிச்சைக்காகவும், விபத்தால் உயிரிழப்புக்கோ, நிரந்தர முடக்கத்துக்கோ ஆளாகும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு முறை நிவாரணமாக நிதி உதவி பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் அங்கீகார அட்டை பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, அந்த அட்டை இல்லாத பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனையோ, சலுகை விலையிலான வீடுகளோ அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. பத்திரிகையாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் விஷயம் என்பது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நடைமுறைகளுக்கு உட்பட்டது. இதில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று அனுராக் தாக்குர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x