Published : 04 Aug 2023 11:50 AM
Last Updated : 04 Aug 2023 11:50 AM

ஹரியாணா வன்முறை | நூ கலவரத்தின்போது விடுப்பில் இருந்த எஸ்.பி. பணியிட மாற்றம்

ஹரியாணா வன்முறை | கோப்புப்படம்

புதுடெல்லி: ஹரியாணாவின் நூ பகுதியில் திங்கள்கிழமை நடந்த விஎச்பி பேரணியில் நடந்த வன்முறையின் போது விடுப்பில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா வியாழக்கிழமை இரவு பிவானி பகுதிக்கு மாற்றப்பட்டார். கலவரம் நடந்தபோது அங்கு காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த நரேந்திர பிஜர்னியா, நூ மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, மாநிலத்தின் கூடுதல் (உள்துறை) தலைமைச் செயலாளர் டிவிஎஸ்என் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பிவானியின் எஸ்பி.,யாகவும், நூ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதுகாக்க கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு)க்கு ஒஎஸ்டியாக செயல்பட்டு வந்த நரேந்திர பிஜர்னியா, நூ மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நூ மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண் சிங்லா பிவானி எஸ்.பி.,யாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூ பகுதியில் கலவரம் நடந்த கடந்த திங்கள் கிழமை விடுப்பில் சென்றிருந்த வருண் சிங்லா வியாழக்கிழமை பணிக்கு திரும்பினார். அன்று இரவு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நூ கலவரம்: ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்தக் கலவரம் குருகிராம் வரை பரவியது. குருகிராமில் கலவரங்கள் தொடர்வதால், ஹரியாணா அரசு புதன்கிழமை கூடுதலாக நான்கு மத்தியப் படைகளின் உதவியை நாடியுள்ளது.

போலீஸாரின் தகவலின்படி, இந்த கலவரங்கள் தொடர்பாக இது வரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 78 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், வெறுப்பு பேச்சுக்களை கண்காணிக்க ஹரியாணா அரசு கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் புதன்கிழமை நுவில் நடந்த வன்முறையைத் தூண்டியதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x