Published : 04 Aug 2023 05:22 AM
Last Updated : 04 Aug 2023 05:22 AM
புதுடெல்லி: ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இதில் இருதரப்பினர் இடையே உருவான மோதல், மதக்கலவரமாக மாறி அருகிலுள்ள குருகிராமிற்கும் பரவியது.
இதில், ஊர்க்காவல் படை வீரர்கள் இருவர், இளம் முஸ்லிம் மவுலானா, பஜ்ரங்தளத்தின் முன்னாள் இளம் நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களின் மசூதி, கடைகள் உள்ளிட்ட பலவும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சாலையோரம் மற்றும் மைதானங்களில் இருந்த புலம்பெயர்ந்த மக்களின் குடிசைகள் சூறையாடப்பட்டன.
இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர்.
இவர்கள், அப்பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக கூலி வேலை, வீட்டு வேலைகள் செய்தும் பிளாட்பாரக் கடைகள் நடத்தியும் பிழைத்து வந்தனர். இவர்கள் எண்ணிக்கை கரோனா பரவல் காலத்திற்கு பின் அதிகரித்திருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தான், பிஹார், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
குருகிராமின் செக்டர் 70-ஏ பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஹமான் அலி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “செவ்வாய்க்கிழமை இரவு சிலர் பைக்குகளில் வந்து இப்பகுதி வாசிகளிடம் பேசினர். அப்போது அனைவரும் இந்த இடத்தை காலி செய்து விட்டு ஊர் திரும்பும்படி மிரட்டினர். எனவே, என்னைபோல் பலரும் குடிசையை காலி செய்துவிட்டு ஊர் திரும்புகிறோம். நிலைமை சரியானால் மீண்டும் இங்கு பிழைக்க வருவது குறித்து யோசிப்போம்” என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.
இந்த குடிசைப் பகுதியில் முஸ்லிம்களை போல் புலம்பெயர்ந்த இந்து குடும்பங்களும் வாழ்கின்றனர். மதக் கலவரத்தால் ஏற்பட்ட அமைதியின்மையால் இந்த இந்துக்களும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்.
இவர்கள் வாழும் பகுதிகளில் இரவுபகலாக மத்தியப் படைகள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளன. இதன் பிறகும் புலம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பும் முடிவிலிருந்து மாறவில்லை.
இதுகுறித்து ஹரியாணா காவல் துறையின் குருகிராம் பகுதி துணை ஆணையர் நிஷாத் குமார் யாதவ் கூறும்போது, “புலம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பும் தகவல் எங்களுக்கும் கிடைத்தது. தற்போது கலவரம் முடிந்து அமைதி நிலவுகிறது.
இதனால், அப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் மூலமாக குடிசைவாசிகளுக்கு தைரியம் ஊட்ட முயற்சிக்கிறோம். அவர்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வதால் எவரும் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
கரோனா பரவலுக்கு பின் குருகிராமில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்கள் வெள்ளிகிழமைகளில் சாலையோரம் தொழுகைகள் நடத்தத் தொடங்கினர். இதுபோல், சாலைகளில் தொழுகை கூடாது என விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தற்போது இந்த முஸ்லிம்களில் பலரது உடமைகளும் கலவரத்தில் சூறையாடப்பட்டு விட்டன. இதனால், இவர்கள் ஊர் திரும்ப அப்பகுதி அடுக்குமாடி வீடுகளில் நன்கொடை கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT