Published : 04 Aug 2023 05:47 AM
Last Updated : 04 Aug 2023 05:47 AM
புதுடெல்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். அவர் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்றபோது பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்றிருந்தார். இதனால் அவரை சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று டெல்லிசென்ற சித்தராமையா பாராளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முதல்வரான பின்னர் முதல் முறையாக சந்திப்பதால் அவர் கர்நாடக முறைப்படி பிரதமருக்கு மைசூரு தலைப்பாகை, சந்தன மாலை அணிவித்தார்.
பிரதமர் மோடி நேற்று சித்தராமையாவின் 76-வது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சித்தராமையா, கர்நாடக மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை, இலவச அரிசி திட்டத்துக்கு இந்திய உணவு கழகம் அரிசி வழங்க மறுத்தது, கர்நாடக அரசின் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சித்தராமையா மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, “கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் மைசூரு தசரா திருவிழாவின் போது இந்திய விமானப் படை சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பின்னால் விமான கண்காட்சி நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டு தசரா விழாவின் போது இந்திய விமானப் படையின் சார்பாக விமான கண்காட்சி நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து சித்தராமையா மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT