Published : 18 Nov 2017 04:11 PM
Last Updated : 18 Nov 2017 04:11 PM
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்டுள்ள அதிருப்தியும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளும் குஜராத் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் புதிய உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் குஜராத் மக்களின் தொழில் பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் பல உள்ளன. ஜாதி கணக்குகளும், இடஒதுக்கீடு கோரிக்கைகளும் அதையும் தாண்டி இந்த தேர்தலில் கவனம் பெற்று வருகின்றன.
இடஒதுக்கீடு கோரி சில ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் படேல் தலைமையி்ல படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் பாஜக அரசை பெரிதும் உலுக்கியது. அதுபோலவே, பால் விலை மற்றும் விவசாய பிரச்னைகளால், ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் தலைமையில் ஷத்ரிய தாக்கூர் சமூகத்தினரும், மாட்டிறைச்சி பிரச்னையில் நடந்த தாக்குதலால் ஜிக்னேஷ் மேவானி தலித் சமூகத்தினரும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
'மூன்று இளம் முகங்கள்'
பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்த இளம் தலைவர்கள் மூன்று பேரையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது காங்கிரஸ். ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இணைந்துள்ளார். அதுபோலவே ஹர்த்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக பாஜக, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சுதேச சமஸ்தானங்களை, இந்தியாவுடன் இணைத்து சாதனை படைத்தவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியது. படேல் இடதுதுக்கீடு போராட்ட குழுவை சேர்ந்த வருண் படேல், ரேஷ்மா படேல் உள்ளிட்டோரை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. பிற்பட்ட சமூகத்தினரிடமும் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
படேல் இடஒதுக்கீடு
குஜராத் தேர்தலில் இப்போது படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை முக்கிய தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை என்பதில் படேல் சமூகத்தின் இளம் தலைமுறையினர் தீவிரமாக உள்ளனர். ஆனால் இதை சட்டபூர்வமாக நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. அங்கு பிற்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 7.5 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் தற்போது அமலில் உள்ளது. மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில், அங்கு தற்போது மொத்தமாக 49.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
எனவே படேல் சமூகத்தினருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளது. அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் குஜராத் அரசின் உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை மத்திய அரசும் அங்கீகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவும் வாய்ப்புள்ளது. அதேசமயம் படேல் சமூகத்தினரை பிற்பட்டோராக அறிவித்து இடஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தால், அங்குள்ள மற்ற பிற்பட்ட ஜாதியினரின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பாஜகவுக்கு சிக்கல்
இதனால் படேல் இடஒதுக்கீடு விவகாரத்தில் இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கிறது ஆளும் பாஜக. எதிர்கட்சியான காங்கிரசோ, ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு வழங்குவோம் என்கிறது. எப்படி சாத்தியம்? என படேல் சமூக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றியும், அதற்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிப்பது பற்றியும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுவினரை சந்தித்து வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர்களோ சட்ட சிக்கல் எழ வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜாதிய கூட்டணி
இதேபோன்ற இடஒதுக்கீடு பிரச்னை 1981ம் ஆண்டு, மாதவ் சிங் சோலங்கி முதல்வராக இருந்தபோது எதிரொலித்தது. முதல்வர் மாதவ சிங் சோலங்கி காலத்தில் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தால், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கனோர் காயமடைந்தனர்.
1980 மற்றும் 1985ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், ஷத்திரியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் முஸ்லீம் ஆகியோரை ஒருங்கிணைத்து பெரும் வாக்குகளை காங்கிரஸ் அறுவடை செய்தது. காங்கிரசின் மாதவசிங் சோலங்கி உருவாக்கிய இந்த ஜாதிய கூட்டணி (KHAM) அக்கட்சிக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. 1985ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 149 இடங்களை கைபற்றி காங்கிரஸ் இமாலய சாதனை புரிந்தது. பின்னர் அதுவே இருமுனை கூர் கொண்ட கத்தியை சுமந்த கதையாக மாறி காங்கிரஸை பதம் பார்த்தது.
காங்கிரஸை தவிக்க வைத்த இடஒதுக்கீடு
எந்த இடஒதுக்கீடும், ஜாதிய அரசியலும் காங்கிரஸுக்கு கைகொடுத்ததோ, அதுவே 1990 தேர்தலில் காங்கிரஸை படுகுழியில் தள்ளியது. காங்கிரசுக்கு எதிராக ஜனதாதளமும், பாஜகவும் செய்த ஜாதிய எதிர் அரசியலால், அந்த தேர்தலில் காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதன் பின் குஜாரத் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு நகர்ந்தது. படேல் சமூகம் தொடங்கி பழங்குடியினர் வரை, அனைவரையும் ஒன்றிணைத்து இந்து வாக்கு வங்கியை உருவாக்கும் பாஜகவின் அரசியல் அக்கட்சிக்கு பெரும் வெற்றி தேடி தந்தது. அத்துடன், மோடியின் தலைமையேற்ற பின் இந்து வாக்கு வங்கியும், வளர்ச்சி அரசியலும் கைகோர்த்ததால் 22 ஆண்டுகளாக இன்று வரை பாஜக அரியணையில் உள்ளது.
22 ஆண்டு வனவாசத்திற்கு பின் குஜராத் தேர்தலில் ஜாதிய அரசியல் மையப்படுத்தப்பட்டு வருகிறது. படேல் சமூக இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்கும் அதேசமயம், மற்ற சமூகத்தை அமைதிப்படுத்தும் சிக்கல் காங்கிரசுக்கு உள்ளது. இருதுருவங்களை நேர்கோட்டிற்குள் கொண்டு வருவது எளிதல்ல. இது சாத்தியமானால், பாஜக மீது அதிருப்தியில் உள்ள மக்களின் 20 சதவீத வாக்குகள் கூடுதலாக காங்கிரசுக்கு கிடைக்கும் என கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். இது நடந்தால் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏறும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைக்கலாம்.
இதை நன்கு உணர்ந்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, வழக்கம் போல் இந்து வாக்குவங்கியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். படேல் சமூகம் மட்டுமின்றி தாக்கூர் சமூக தலைவர்களையும் சமாதானம் செய்து, இடஒதுக்கீடு பிரச்னையில், தேர்தலுக்கு பிறகு தீர்வு காண்பதாக பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
யார் முயற்சி வெல்லும்? என்பதை காண தேர்தல் முடிவு வரும் வரை நாம் காத்து இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT