Published : 03 Aug 2023 01:46 PM
Last Updated : 03 Aug 2023 01:46 PM

“பாதுகாக்கப்படுகிறாரா பிரதமர்?” - மணிப்பூர் பிரச்சினையில் கார்கே குற்றச்சாட்டும், ஜெக்தீப் தன்கர் பதிலும்

புதுடெல்லி: "நான் யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை, நான் அரசியலமைப்பை பாதுகாக்கவே இங்கே இருக்கிறேன்" என்று மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளிகள் காரணமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜெக்தீர் தன்கரிடம் ‘மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. திரிணமூல் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், “நாங்கள் திமிர் காட்டவோ, ஈகோ காட்டவோ இங்கே இல்லை. மணிப்பூர் குறித்து நாங்கள் பேசுவதை நாட்டு மக்கள் கேட்க வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர், “மணிப்பூர் குறித்து விவாதிப்பது அவசியமானது. அனைவரின் இதயமும் அதனை விரும்புகிறது. என்றாலும் மற்ற விஷயங்களுக்கும் செவிசாய்க்க வேண்டும். இங்குள்ள உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவதற்கு மதியம் 1 மணிக்கு என் அறையில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.

கார்கே குற்றச்சாட்டு: அவரைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, "உறுப்பினர்கள் முறையான வழியில் தெரிவிக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். ‘இண்டியா’ உறுப்பினர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். (கார்கே இண்டியா என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையில் தட்டினர். அமளி அடங்கியதும் தொடர்ந்து அவர் பேசினார்) விதி 267 என்பது மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு அந்தப் பிரச்சினையை விவாதிப்பது என்பதை. இது ஏன் கவுரவப் பிரச்சினையாக மாறுகிறது என்று எனக்கு புரியவில்லை. எனது நோட்டீஸில் மணிப்பூர் பிரச்சினை ஏன் விதி 267-ன் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்று 8 காரணங்கள் கூறியிருக்கிறேன். அவைத் தலைவர் விதி 267-ன் விவாதிக்க காரணம் இல்லை என்கிறார்.

நீங்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட அனுமதிக்க மறுக்கிறீர்கள். நீங்கள் பிரதமரைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள். ஏன் என்றுதான் புரியவில்லை" என்று கார்கே தெரிவித்தார்.

பாதுகாக்கவில்லை: கார்கேவின் கடைசி கருத்துக்கு பதிலளித்துப் பேசிய அவைத் தலைவர், "அனைத்து நிலைகளிலும் அரசியலமைப்புச் சுதந்திரம் உள்ளது. பிரதமரை நான் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. அவர் உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். நமது பிரதமரை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். நான் யாரையும் பாதுகாக்கவில்லை. நான் அரசியலமைப்பையும், உங்கள் உரிமைகளையும் பாதுகாக்கவே இங்கே இருக்கிறேன். எனக்கு அரசியல் குறித்து அக்கறை இல்லை. ஆட்சி முறை குறித்த கவலை இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தலைவரின் இந்தப் புரிதல் ஆரோக்கியமானது இல்லை" என்றார்.

அவைத் தலைவர், எதிர்க்கட்சிகளின் தலைவருக்கு இடையேயான இந்த விவாதம் முடிந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

“பிரதமரே, நீங்கள் இன்னும் நாடாளுமன்றம் வரவில்லை?”- டெரிக் கேலி: இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன், பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றம் வராதது குறித்து கேலி செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் எக்ஸ் பதிவொன்றில், "மணிப்பூர் விவகாரம் குறித்து விதி 267-ன் கீழ் விவாதம் நடைபெறாத வரை அங்கு எந்த அலுவலும் நடக்காது. எங்களுக்கு மணிப்பூர் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், பிரதமர் முதலில் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியினை டேக் செய்து, "பிரதமர் நரேந்திர மோடி அவர்களே... நீங்கள் இன்னும் ஒரு நிமிடம் கூட நாடாளுமன்றம் வரவில்லை. உங்கள் கூட்டாளிகள் ஆகஸ்ட் 10-ம் தேதி, அதாவது கூட்டத்தொடரின் கடைசி நாள் நீங்கள் நாடாளுமன்றம் வருவீர்கள் என்று தெரிவித்துள்ளனர்" என்று கேலி செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x