Published : 30 Nov 2017 09:18 AM
Last Updated : 30 Nov 2017 09:18 AM

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமூக பிரச்சினையாக கருத வேண்டும்: ஹைதராபாத் மாநாட்டில் இவாங்கா ட்ரம்ப் கருத்து

ஹைதராபாத்தில் நேற்று 2-ம் நாளாக சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் பேசியதாவது:

தகவல் தொழில் நுட்பத்தில் பெண்களுக்கும், பெண் தொழிலதிபர்களுக்கும் அதிக அவகாசங்கள் உள்ளன. பணிக்கு செல்லும் பெண்கள் வேலை பார்த்துக்கொண்டே தங்களது குடும்பத்திற்கு வருமான உதவி செய்கின்றனர். புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் துறைகளே அதிகம் சாதிக்கின்றன. எந்த துறையிலும், அதன் சேவை நன்றாக இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி தொடரும். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, பெண்களுக்குரிய பிரச்சினைகளாக பார்க்க கூடாது. இந்த சமூகத்தில் 50 சதவீதம் சரிசமமாக உள்ள பாலினத்தவரின் பிரச்சினையாகவும், சமூக பிரச்சினையாகவும் கருத வேண்டும். இவ்வாறு இவாங்கா பேசினார். கருத்தரங்கில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர், ஐசிஐசிஐ வங்கியின் எம்.டி. சந்தா கொச்சர் ஆகியோரும் பங்கேற்றனர்.

நேற்று மாலை புகழ்பெற்ற ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையை சுற்றிப் பார்த்த இவாங்கா. கோட்டையின் வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார். இரவு தெலங்கானா அரசு சார்பில் இவாங்காவிற்கு கோல்கொண்டா கோட்டையில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதில் வெளிநாட்டு தொழிலதிபர்கள், ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் என 2,000 பேர் பங்கேற்றனர். இதில் ஹைதராபாத் பிரியாணி, ஹலீம், சிக்கன், மட்டன், மீன், இறால் வகைகள், இரானி டீ பரிமாறப்பட்டன. இவற்றை இவாங்கா ரசித்து சாப்பிட்டார்.

புடவை பரிசளிப்பு

இவாங்காவுக்கு தெலங்கானா அரசு சார்பில் கத்வால், சிரிசில்லா பகுதியில் புகழ்பெற்ற பட்டு மற்றும் கைத்தறி புடவைகளை முதல்வர் சந்திரசேகர ராவ் பரிசாக வழங்கினார். சார்மினார் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. ‘இந்திய சுற்றுப்பயணம் வாழ்நாளில் மறக்க இயலாதது’ என இவாங்கா தெரிவித்தார். பின்னர் இரவு 9.20 மணிக்கு விமானத்தில் அமெரிக்கா சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x