Published : 07 Nov 2017 10:40 AM
Last Updated : 07 Nov 2017 10:40 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காளை மாடுகளை காட்சிப் படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து, இந்திய விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது. பின்னர் நடந்த மெரீனா போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், இந்திய மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ல், தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடை நீங்கியது.
இந்நிலையில், ‘பீட்டா’ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள சட்ட திருத்தம், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தடையை மீறியதாகும். மேலும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான ஐந்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றிய பின் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை 5 காளைகள் இறந்துள்ளன; 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, போலீஸார், பார்வையாளர் உள்ளிட்ட 1948 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,263 பேர் காயமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. கூர்மையான ஆயுதங்களால் குத்தி காயப்படுத்துகின்றனர். காளைகள் மீது பாய்ந்து விழுவதாலும், மூக்கணாங்கயிறை பிடித்து இழுப்பதாலும் காளைகளுக்கு ரத்தக் காயம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். எனவே, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கள் இம்மனு குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் இந்த மனுவை சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT