Published : 03 Aug 2023 12:03 PM
Last Updated : 03 Aug 2023 12:03 PM

“எங்களிடம் ஈகோ இல்லை” - நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினையில் தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 11-வது நாளில் காலையில் கேள்வி நேரத்துடன் தொங்கிய மக்களவை எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்புவதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மணிப்பூர் விவகாரத்தால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி, பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவையை வழிநடத்திய தலைவர் ராஜேந்திர அகர்வால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

முன்னதாக, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை மக்களவையில் தரவுகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட இருந்தது. அதேபோல், டெல்லி சேவைகள் தொடர்பான மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. டெல்லியில் அரசுப் பணியாளர்களின் பணிமாறுதல் உள்ளிட்ட சேவைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்ததக்கது.

மாநிலங்களையில் அவைத் தொடங்கியதும் இன்று அளிக்கப்பட்ட நோட்டீஸ் குறித்து அறிவித்தார். மாநிலங்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, "நாங்கள் ஈகோ மற்றும் திமிரைக் காட்டுவதற்கு இங்கு இல்லை. நாங்கள் மணிப்பூர் நிலவரம் குறித்து பேசுவதை இந்த நாட்டு மக்கள் கேட்க வேண்டும்" என்று அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் “மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவது மிகவும் அவசியம். நாம் அனைவரும் அதனையே விரும்புகிறோம். ஆனால் அவையில் நமது முதிர்ச்சியைக் காட்ட மற்ற விஷயங்களுக்கு நாம் செவி சாய்க்கவும் வேண்டும். அவையில் இருக்கும் தலைவர்களை நான் மதியம் 1 மணிக்கு வர அழைப்பு விடுக்கிறேன். நேரமின்மையை கணக்கில் கொள்ளாமல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x