Published : 03 Aug 2023 09:19 AM
Last Updated : 03 Aug 2023 09:19 AM

ஹரியாணா வன்முறையில் 6 பேர் உயிரிழப்பு: இதுவரை 116 பேர் கைது

கோப்புப்படம்

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த 31-ம் தேதி பிரிஜ்மண்டல் ஜலாபிஷேக யாத்திரை குருகிராமில் இருந்து நூ மாவட்டத்தில் உள்ள நள்ஹா்ர மகாதேவ் கோயில் வரை நடத்தப்பட்டது. இதை மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் கேட்லா மோட் பகுதியில் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் இடையே வன்முறை வெடித்தது.

போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தன. நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கு பரவியது. ஒரு கும்பல் மசூதி மீது தாக்குதல் நடத்தி மதகுரு ஒருவரை கொன்றது.

இதையடுத்து நூ மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஃபரிதாபாத், பல்வால், குருகிராம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில போலீசாருடன் 20 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

ஹரியாணா வன்முறை குறித்து மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:

நூ மாவட்டத்தில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வன்முறையில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. குற்றம் செய்தவர்கள் யாரையும் விடமாட்டோம்.

இந்த வன்முறைக்கு சதி செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு.

மத்தியப் படைகளின் 20 கம்பெனிகள் பாதுகாப்பு பணிக்கு ஹரியாணா வந்துள்ளன. தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீடை அரசு வழங்கும். இதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இழப்பு ஏற்பட்டவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு கிடைக்கும்.

இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.

வன்முறை குறித்து ஹரியாணா டிஜிபி அகர்வால் கூறியதாவது: ஹரியாணா வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். இந்த வன்முறையில் பஜ்ரங் தள உறுப்பினர் மோனு மானேஸரின் பங்கு குறித்து விசாரிக்கப்படுகிறது.

தற்போது ஹரியாணாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நூ மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. குருகிராமில் மசூதியின் மதகுரு கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி அகர்வால் கூறினார்.

ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், ‘‘நூ மாவட்டத்தில் யாத்திரை நடத்தியவர்கள், அது பற்றி முழுமையான தகவலை மாவட்ட நிர்வாகத்தினருக்கு தரவில்லை. இதனால் அந்த யாத்திரை கலவரத்தில் முடிந்தது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x