Last Updated : 03 Aug, 2023 09:11 AM

5  

Published : 03 Aug 2023 09:11 AM
Last Updated : 03 Aug 2023 09:11 AM

ஹரியாணா கலவரம்: தலைமறைவான பசு பாதுகாவலர் மோனு யாதவ் மீது புகார்

புதுடெல்லி: ஹரியாணாவில் வெடித்து வரும் மதக்கலவரத்துக்கு தலைமறைவாகி உள்ள பசு பாதுகாவலர் மோனு யாதவ்(30) காரணம் என்ற குறறச்சாட்டு எழுந்துள்ளது.

ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தை சேர்ந்தவர் மோனு மானேஸர் என்றழைக்கப்படும் மோஹித் யாதவ். இவரை மோனு யாதவ் என்று அழைக்கின்றனர். இவர் மேவாத்தின் பஜ்ரங்தளம் பசு பாதுகாவலர் படைக் குழுவின் தலைவராக உள்ளார்.

2 பேர் எரித்துக் கொலை: கடந்த 2016 பிப்ரவரியில் ராஜஸ்தானைச் சேர்ந்த நசீர் (27), ஜுனைத்(35) என்ற இருவர் எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் பசுக்களை கடத்தியதாகக் கூறி, மோனு தலைமையிலான கும்பல், இருவரையும் கொன்றதாக வழக்கு பதிவாகி நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் ஹரியாணாவின் பட்டோடி கிராமம், குருகிராமிலும் இவர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

மோனு யாதவ், தனது பாலிடெக்னிக் கல்வி முதல் பஜ்ரங் தளம் அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு சுமார் 2 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

முகநூலில் பிரபலம்: மேலும் இவரது முகநூல் பக்கத்தை சுமார் 83,000 பேர் பின்தொடர்கின்றனர். இதன் முகப்புகளில் மோனு துப்பாக்கி ஏந்தியபடியே காட்சி தருகிறார்.

இந்தச் சுழலில், கடந்த திங்கள்கிழமை குருகிராம், நூவில் நடைபெற்ற மதக்கலவரத்திலும் மோனு மீது புகார் கிளம்பி உள்ளது. இதற்கு அவர் விஎச்பியின் ‘ஷோபா யாத்ரா’ ஊர்வலம் துவங்குவதற்கு ஒருநாள் முன்னதாக சமூகவலை தளங்களில் பதிவிட்ட காட்சிப்பதிவு காரணமாகிவிட்டது.

இதில் மோனு, விஎச்பி ஊர்வலத்துக்கு தன்னுடன் தம் மதத்தினர் திரளாகக் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், கடைசி நேரத்தில் மோனு இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இருப்பினும், ஏற்கெனவே மோனு மீது அப்பகுதியின் முஸ்லிம்களுக்கு கடும் கோபம் நிலவி வந்தது. இந்த ஊர்வலத்துக்கு அவர் வரும் காட்சிப்பதிவு தகவலால், பதற்றம் உருவானது. இதையும் மீறி போலீஸார் அந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். தற்போது, கலவரம் தொடர்பான விசாரணைக்கு வராமல் மோனு யாதவ், தலைமறைவாக இருந்தபடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

எம்எல்ஏ.தான் காரணம்: இதுகுறித்து தனது மறுப்பில் மோனு யாதவ் கூறும்போது, ‘நான் வெளியிட்ட காட்சிப் பதிவில் நான் தவறாக எதுவும் கூறவில்லை. இப்பகுதியின் எம்எல்ஏவான சவுத்ரி அப்தாப் அகமதுவின் தூண்டுதல்தான் கலவரத்துக்குக் காரணம். 2019-ல் இருவர் கொலையிலும் என் மீது கொலை வழக்குப்பதிவாகி உள்ளது. நம் தாயான பசுக்களைப் பாதுகாப்போம். ஆனால், அதற்காக சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம். இங்கு எலி பலியானாலும் அதற்கு இந்த மோனுதான் காரணம் என்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலவரத்தை கண்டித்து விஎச்பியினர் அருகில் உள்ள உ.பி.யின் காஜியாபாத், நொய்டா, பல்வால் மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தி உள்ளனர்.

இதனால், அப்பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. ஹரியாணாவின் எல்லையில் அமைந்துள்ள டெல்லியின் மாவட்டப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x