Published : 02 Aug 2023 10:51 PM
Last Updated : 02 Aug 2023 10:51 PM
புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 14,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இன்று (ஆகஸ்ட் 2) மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவலை மாநிலங்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து பூர்வமாக தெரிவித்தார். இதில் சுமார் 93 சதவீதம் மாணவர்கள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“மணிப்பூரில் நிலவும் சூழல் காரணமாக சுமார் 14,763 பள்ளி செல்லும் மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் பள்ளியில் சேர்க்கை பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் அனைத்து நிவாரண முகாமுக்கும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மாணவர்களில் 93.5 சதவீதம் பேர் அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்க்கை பெற்றுள்ளனர்” என அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT