Published : 02 Aug 2023 10:05 PM
Last Updated : 02 Aug 2023 10:05 PM
சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்பது காவல் துறையால் சாத்தியமில்லை என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரியாணா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடைபெற்றது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நூ மாவட்டத்தில் முடிவடைவதாக இருந்தது. கேட்லா மோட் பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது.
ஒரு கும்பல் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தது. மேலும், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். தொடர்ந்து குருகிராமிலும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இணைய சேவை முடங்கியது.
“அனைவரையும் காவல் துறை, ராணுவம், என்னாலோ பாதுகாப்பது என்பது சாத்தியம் இல்லாத காரணம். பாதுகாப்பை உறுதிப்படுத்த குறிப்பிட்ட சூழல் தேவை. சமூகத்தில் மக்களிடையே நல்லுறவும், நட்புறவும் அவசியம். அதற்காகவே அமைதி கமிட்டிகள் உள்ளன. உலகில் எங்கு சென்றாலும் காவல் துறையால் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. 2 லட்சம் மக்களுக்கு 50 ஆயிரம் போலீஸார் தான் உள்ளனர்.
இந்த வன்முறைக்கு காரணம் என சொல்லப்படும் மோனு மனேசர் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹரியாணா அவர்களுக்கு உதவ தயாராக உள்ளது. அவர் குறித்து அந்த மாநில போலீஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வன்முறை தொடர்பாக இதுவரை சுமார் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமானவர்கள் தான் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு பொறுப்பு. காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அமைதி காக்க வேண்டிக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT