Published : 02 Aug 2023 08:29 AM
Last Updated : 02 Aug 2023 08:29 AM

ஹரியாணாவின் 2 மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: இணையதள சேவை முடக்கம், துணை ராணுவப் படையினர் குவிப்பு

கோப்புப்படம்

குருகிராம்: ஹரியாணாவில் வெடித்துள்ள மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 5 பேர்உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹரியாணா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடைபெற்றது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நூ மாவட்டத்திலுள்ள நள்ஹார் மகாதேவ் கோயிலில் முடிவடைவதாக இருந்தது.

கேட்லா மோட் பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஒரு கும்பல் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தது. மேலும், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.

2,500 பேர் கோயிலில் தஞ்சம்: இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த வன்முறையில் இருந்து தப்புவதற்காக 2,500 பேர் அருகில் உள்ள கோயில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீஸா ரும், துணை ராணுவப் படையினரும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதொடர்பான பொய்யான செய்திகள் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தில் இன்று வரை (ஆகஸ்ட் 2) இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.

பின்னர், குருகிராமின் சோனாவிலும் வன்முறை பரவியுள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான 4 வாகனங்கள், ஒரு கடை தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த மசூதி ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 முஸ்லிம்களை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் ஊர்வலத்தில் பங்கேற்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுவே வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 2 போலீஸார், பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவர சம்பவங்களில் ஈடுபட்ட தாக இதுவரை 20 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

14 கடைகள் சூறை: இந்நிலையில் நேற்றும் பல பகுதிகளில் புதிதாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குருகிராம் செக்டார்-66-ல் 7 கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 14 கடைகள் சூறையாடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x