Published : 02 Aug 2023 05:09 AM
Last Updated : 02 Aug 2023 05:09 AM
சென்னை: மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்குமாறு மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களதுஉயிர், உடமைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் என் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில், ரூ.10 கோடி மதிப்புள்ள தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள், பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணபொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்துக்கு உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மனிதாபிமான உதவிக்குமணிப்பூர் மாநில அரசு தனது ஒப்புதலை வழங்க வேண்டும். மேலும்,இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் தமிழக அரசு அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு, நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT